வளர்ச்சிக்கான அரசியலே எங்களுக்கு முக்கியம்; வாக்கு வங்கி அரசியல் அல்ல: பிரதமர் மோடி பேச்சு
மூன்றரை ஆண்டுகளில் மொத்தமுள்ள 18 கோடி கிராமப்புற குடும்பங்களில், 11 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் கிடைக்க செய்துள்ளோம் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பெங்களூரு,
பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவின் யாதகிரி மாவட்டத்திற்கு சென்ற அவர் ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடி, மாநிலத்தில் குடிநீர், பாசனம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை இன்று தொடங்கி வைத்து பேசினார். திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முன் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, இதற்கு முன்பிருந்த அரசாங்கங்கள் பின்தங்கிய மாவட்டங்கள் என அறிவித்திருந்த பகுதிகளில் நாங்கள் வளர்ச்சி பணிகள் மற்றும் நல்ல நிர்வாகம் ஆகியவற்றை கொண்டு வந்தோம்.
மூன்றரை ஆண்டுகளுக்கு முன் ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டபோது, மொத்தமுள்ள 18 கோடி கிராமப்புற குடும்பங்களில் 3 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கே குழாய் வழி குடிநீர் வசதி இருந்து வந்தது.
ஆனால் தற்போது நாட்டில், 11 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் கிடைக்க பெறுகிறது. இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகள், சாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் உட்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கு பதில், பணியாற்றுவதற்கு பதிலாக வாக்கு வங்கி அரசியலை ஊக்குவித்தன.
அவர்களது வாக்கு வங்கி அரசியலின்படி அனைத்து திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டன. ஆனால், எங்களுக்கு வளர்ச்சி பணிகளே முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்கு வங்கி அரசியல் அல்ல என பேசியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, கலபுரகி மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.