பஞ்சாப் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த ஜலந்தர் எம்.பி. தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி
பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.
ஜலந்தர் எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தவர் சந்தோக் சிங் சவுத்ரி (வயது 76) ஆவார். இவர் கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் நடந்து சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதன் காரணமாக ஜலந்தர் மக்களவை தொகுதிக்கு கர்நாடக சட்டசபை தேர்தலுடன் கடந்த 10-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் மறைந்த எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரியின் மனைவி கரம்ஜித் கவுர் சவுத்ரியை காங்கிரஸ் கட்சி களம் இறக்கியது. அவரை எதிர்த்து பஞ்சாப்பில் ஆளும் கட்சியாக உள்ள கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுஷில் குமார் ரிங்கு போட்டியிட்டார்.
ஆம் ஆத்மி வெற்றி
இங்கு நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷில் குமார் ரிங்கு வெற்றி பெற்றார். அவர் தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் கரம்ஜித் கவுர் சவுத்ரியை 58 ஆயிரத்து 691 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
வாக்குகள் விவரம்
சுஷில் குமார் ரிங்கு (ஆம் ஆத்மி) - 3,02,279
கரம்ஜித் கவுர் சவுத்ரி (காங்கிரஸ்) - 2,43,588
சுக்விந்தர் சுகி (அகாலிதளம்) - 1,58,445
இந்தர் இக்பால் சிங் அத்வால் (பா.ஜ.க.) - 1,34,800