ஒடிசாவில் ஜனாதிபதி முர்மு பங்கேற்ற நிகழ்வில் மின்தடை - இருளில் உரையைத் தொடர்ந்த ஜனாதிபதி


ஒடிசாவில் ஜனாதிபதி முர்மு பங்கேற்ற நிகழ்வில் மின்தடை - இருளில் உரையைத் தொடர்ந்த ஜனாதிபதி
x

ஒடிசாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்ற நிகழ்வில் அவர் உரையைத் தொடங்கிய போது திடீரென மின்தடை ஏற்பட்டது.

புவனேஸ்வர்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு, 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். இந்த நிலையில் ஜனாதிபதி முர்மு, மயூர்பஞ்சின் பரிபாடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா டியோ பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அப்போது, ஜனாதிபதி முர்மு தனது உரையைத் தொடங்கிய போது திடீரென மின்தடை ஏற்பட்டது.

பல்கலைக்கழகத்தின் முழு அரங்கமும் சுமார் ஒன்பது நிமிடங்களுக்கு இருளில் மூழ்கியது. மின்சார விநியோகம் தடைப்பட்ட போதிலும், ஜனாதிபதி சற்றும் தயங்காமல் இருளில் தனது உரையைத் தொடர்ந்தார். இருளில் தனது உரையைத் தொடர்ந்தாலும், மிகவும் நேர்த்தியான முறையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் தனது உரையின் போது "பல்கலைக்கழகம் எவ்வளவு அழகாக உள்ளதோ அவ்வளவு இருளில் உள்ளது" என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதி இருளில் உரை ஆற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஒடிசா முன்னாள் டி.ஜி.பி., பிபின் மிஸ்ரா கூறும்போது, "ஜனாதிபதி அல்லது பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் போது மின்தடை ஏற்பட்டதை நான் பார்த்ததில்லை. தடையில்லா மின்சாரம் வழங்க பல ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் இங்கு ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை. இது ஒரு தோல்வி" என்று கூறினார்.

மேலும் இன்று ஜனாதிபதியிடம் இருந்து முனைவர் பட்டம் பெற்ற பிஎச்டி அறிஞர் பிரதீப் குமார் நந்தா "அரங்கம் 10 நிமிடங்கள் இருளில் இருந்தது. இது ஜனாதிபதியை அவமதிக்கும் செயலாகவே கருதுகிறேன். ஜனாதிபதி இந்த விஷயத்தை லாவகமாக எடுத்துக்கொண்டாலும், இது ஒடிசாவுக்கு அவமானம்" என்று கூறினார்.

மற்றொரு பிஎச்டி அறிஞர் தீபக் குமார் பெஹெரா "திருமணம் போன்ற சமூக நிகழ்ச்சிகளின் போது கூட சில நொடிகளில் மின்சாரம் சீராகிவிடும். ஆனால் இங்கு பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி 10 நிமிடங்களுக்கு மேல் இருளில் இருக்க வேண்டியுள்ளது. நாட்டின் ஜனாதிபதிக்கு கூட தடையில்லா மின்சாரம் வழங்க முடியாது என்றால், சாதாரண மக்களுக்கு எப்படி வழங்க முடியும்?" என்று கூறினார்.


Next Story