மைசூரு அரண்மனையில் கோலாகலம்; பிரதமர் மோடி 15 ஆயிரம் பேருடன் யோகாசனம் செய்து அசத்தினார்


மைசூரு அரண்மனையில் கோலாகலம்; பிரதமர் மோடி 15 ஆயிரம் பேருடன் யோகாசனம் செய்து அசத்தினார்
x

மைசூரு அரண்மனை வளாகத்தில் நேற்று நடந்த சர்வதேச யோகா தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினார். அதில் சிலவற்றை படங்களில் காணலாம்.

தினத்தந்தி 21 Jun 2022 9:07 PM GMT (Updated: 21 Jun 2022 9:09 PM GMT)

மைசூரு அரண்மனையில் கோலாகலமாக நடந்த 8-வது சர்வதேச யோகா தின விழாவில் 15 ஆயிரம் பேருடன் சேர்ந்து பிரதமர் மோடி யோகாசனங்கள் செய்து அசத்தினார்.

மைசூரு:

சர்வதேச யோகா தினம்

8-வது சர்வதேச யோகா தின விழாவையொட்டி மைசூரு அரண்மனையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்துக்கு வந்தார். நேற்று முன்தினம் கர்நாடகத்தின் தலைநகரமான பெங்களூருவுக்கு வந்த அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் மாலையில் அவர் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருவில் இருந்து மைசூருவை சென்றடைந்தார். மைசூருவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இரவு மைசூரு டவுன் மகாத்மா காந்தி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று காலையில் மைசூரு அரண்மனை வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

பிரதமர் மோடி

இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்த 15 ஆயிரம் பேர் திட்டமிட்டபடி முன்கூட்டியே அரண்மனை வளாகத்தில் குவிந்தனர். அதாவது அவர்கள் அதிகாலை 3 மணிக்கே அரண்மனைக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் கொரோனா விதிகளை கடைப்பிடித்து அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பிறகு போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அரண்மனை வளாகத்திற்குள் அனுமதித்தனர். அதன்பிறகு காலை 6 மணியளவில் கவர்னர், முதல்-மந்திரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அரண்மனைக்கு வந்தனர். அவர்களும் சோதனைப்பிறகு அரண்மனைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் இருந்து யோகா பயிற்சி உடையில்(வெள்ளை நிற உடை) காரில் புறப்பட்டு அரண்மனைக்கு வந்தார். அவர் அரண்மனையின் பிரதான நுழைவு வாயில் வழியாக அரண்மனைக்கு காலை 6.30 மணிக்கு வந்தார். அவரை அரண்மனையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மைசூரு இளவரசர் யதுவீர், மகாராணி பிரமோதா தேவி, மந்திரிகள் சுதாகர், எஸ்.டி.சோமசேகர் உள்பட பலர் வரவேற்றனர்.

15 ஆயிரம் பேர் பங்கேற்பு

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அரண்மனை வளாகத்தில் உள்ள 'அம்பா விலாஸ் அரண்மனை' பகுதியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு சென்றார். பிரதமர் தலைமையில் நடந்த இந்த யோகா தின விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி சர்பனந்த சோனவால், மந்திரிகள் சுதாகர், எஸ்.டி.சோமசேகர், மைசூரு இளவரசர் யதுவீர், மகாராணி பிரமோதா தேவி மற்றும் பலர் கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்தனர்.

கன்னட வாழ்த்துடன் சரியாக சூரியன் உதிக்கும் சமயத்தில் இந்த யோகா பயிற்சி தொடங்கியது. முன்னதாக பிரதமர் மோடி விழாவில் பேசினார். அவரைத் தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மகாராணி பிரமோதா தேவி, இளவரசர் யதுவீர், மந்திரிகள் சுதாகர், எஸ்.டி.சோமசேகர் ஆகியோர் பேசினர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மேடையில் யோகா பயிற்சி மேற்கொள்ளாமல் கீழே இறங்கி வந்து மக்களோடு, மக்களாக யோகா பயிற்சி செய்தார். அவருடன் சேர்ந்து அரண்மனை வளாகத்தில் திரண்டிருந்த 15 ஆயிரம் பேரும் யோகா பயிற்சி செய்தனர். இதில் பலவிதமான யோகா கலை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி பல்வேறு யோகாசனங்கள் செய்து அசத்தினார்.

ஒரு மணி நேரம் யோகா

சுமார் ஒரு மணி நேரம் இந்த யோகா பயிற்சி நடந்தது. இதில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அனைவரும் யோகா பயிற்சியை சிறப்பாக செய்தனர். சரியாக காலை 7.45 மணிக்கு யோகா பயிற்சி முடிந்தது. அதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, மைசூரு இளவரசர் யதுவீர், மகாராணி பிரமோதா தேவி ஆகியோருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

அதையடுத்து அரச குடும்பத்தினரின் அழைப்பின் பேரில் அரண்மனைக்கு பின்பகுதியில் உள்ள அவர்களது வீட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். பின்னர் தசரா கண்காட்சி மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் வடிவிலான யோகா கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அதையடுத்து பிரதமர், அங்கிருந்து காரில் தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பிரதமர் மோடி, காலை 10.30 மணியளவில் தனி ஹெலிகாப்டர் மூலம் மைசூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். பிரதமரை வழியனுப்பி வைத்த பின்பு கவர்னர், முதல்-மந்திரி, மந்திரிகள் மற்றும் பலர் காலை 11 மணிக்கு மைசூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றனர்.

பலத்த பாதுகாப்பு

பிரதமர் வருகையையொட்டி மைசூரு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மைசூரு அரண்மனையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குறிப்பாக முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


Next Story