புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
இரண்டு அம்ரித் பாரத் ரெயில்கள், 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகியவற்றை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அயோத்தி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான ராமர் கோவில், அடுத்த மாதம் 22-ந் தேதி திறக்கப்படுகிறது. அங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ரெயில் நிலையமும் ரூ.240 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து அயோத்திக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக, புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டார்.
ரெயில் நிலையம்வரை வாகன பேரணியாக (ரோடு ஷோ) வந்தார். அப்போது சாலையின் இருபுறமும் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று பிரதமரை வரவேற்றனர்.
ரெயில் நிலையத்தை அடைந்ததும், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அத்துடன், 2 அம்ரித் பாரத் ரெயில்கள், 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அம்ரித் பாரத் ரெயிலில் பயணிக்கும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.