அமெரிக்கா, எகிப்து அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார், பிரதமர் நரேந்திர மோடி
அமெரிக்கா, எகிப்து அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி திரும்பினார்.
கெய்ரோ,
பிரதமர் மோடி தனது 3 நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று முன்தினம் 2 நாள் அரசு முறைப்பயணமாக எகிப்து நாட்டுக்குச் சென்றார். 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர், எகிப்து நாட்டுக்கு சென்றது இதுவே முதல் முறை ஆகும்.
அங்குள்ள கெய்ரோ விமான நிலையத்துக்கு சென்று இறங்கிய பிரதமர் மோடியை ஒரு சிறப்பு நிகழ்வாக அந்த நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி நேரில் வந்து வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்தியா உடனான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா எல்சிசியால், பிரதமர் முஸ்தபா மட்புலி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூத்த மந்திரிகள் குழுவினரைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையே பாதுகாப்பு துறை தொடர்பான கூட்டுக்கு உதவும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், விவசாயம் மற்றும் அதன் சார்புடைய துறைகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் தொன்மையான இடங்களைப் பாதுகாத்தல், போட்டி சட்டம் தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
பிரதமருக்குமிக உயரிய விருது
பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆப் தி நைல்' விருதை அதிபர் எல்சிசி வழங்கிக் கவுரவித்தார்.
இந்த விருது, அந்த நாட்டில் 1915-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதாகும். இது எகிப்து நாட்டுக்கு அல்லது மனித குலத்துக்கு மதிப்புக்குரிய சேவையாற்றுகிற நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும், பட்டத்து இளவரசர்களுக்கும், துணை அதிபர்களுக்கும் வழங்கக்கூடியதாகும். இந்த விருது, பிற நாடுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ள 13-வது விருது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் பிரதமர் மோடி எகிப்து பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு கெய்ரோவில் இருந்து தலைநகர் டெல்லிக்கு நேற்று இரவு புறப்பட்டார்.
இந்நிலையில் அமெரிக்கா, எகிப்து அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று நள்ளிரவு டெல்லி திரும்பினார். டெல்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடியை பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் பிற கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.