ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து


ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து
x

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாரீஸ்,

பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக ஆக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் சாதனை! இந்திய ஆக்கி அணி ஒலிம்பிக்கில் பிரகாசமாக ஜொலித்து, வெண்கலப் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளது! அவர்கள் ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2-வது முறையாக பெற்ற பதக்கம் இது என்பது மேலும் சிறப்பு.

அவர்களின் வெற்றி என்பது திறமை, விடாமுயற்சி மற்றும் குழு உணர்வின் வெற்றி. அவர்கள் மகத்தான துணிச்சலையும், நெகிழ்ச்சியையும் காட்டினார்கள். வீரர்களுக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் ஆக்கியுடன் உணர்ச்சி ரீதியிலான தொடர்பைக் கொண்டுள்ளனர், மேலும் இந்த சாதனை நமது தேசத்தின் இளைஞர்களிடையே விளையாட்டை மேலும் பிரபலமாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், "பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நம்முடைய ஆக்கி அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்திய ஆக்கியின் மறுமலர்ச்சிக்காக அந்த அணி மிக உயர்ந்த பாராட்டுக்கு உரியது. அவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த அணி காட்டும் நிலைத்தன்மையும், திறமையும், ஒற்றுமையும், போராடும் குணமும் நமது இளைஞர்களை ஊக்குவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story