தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:46 PM GMT)

போலீசை வைத்து மிரட்டி, தாக்கியதாக தனியார் நிறுவன உரிமையாளர் மீது கடிதத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு கூறிவிட்டு தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு:-

தனியார் நிறுவன ஊழியர்

பெங்களூருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 47). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்த நிறுவனத்தின் நிறுவனர் சனவுல்லா ஆவார். இவர் நாகராஜ் உள்பட பலரிடம் அதிக வட்டி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்று இருந்தார். ஆனால் அந்த பணத்தை கொடுக்காமலும், வட்டியை கொடுக்காமலும் சனவுல்லா இருந்து வந்தார்.

இதுகுறித்து நாகராஜ், சனவுல்லாவிடம் கேட்டார். அப்போது அவர் முறையாக பதில் கூறாமல் இருந்துள்ளார். மேலும் அவர் மீது நாகராஜ் வயாலிக்காவல் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் போலீசார் நாகராஜை அழைத்து விசாரித்தனர்.

தற்கொலை

மேலும் சனவுல்லாவை விசாரிக்காமல், விசாரணை என்ற பெயரில் நாகராஜை போலீசார் பெல்ட் மற்றும் காலால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவ்வப்போது விசாரணை என்ற பெயரில் நாகராஜை போலீசார் அழைத்து மிரட்டி உள்ளனர். இதனால் நாகராஜ் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நாகராஜ் நேற்று மதியம் தனது வீட்டில், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உருக்கமான கடிதம் சிக்கியது

உடனே அவர்கள் தலகட்டபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவரது அறையை சோதனை செய்தனர். அப்போது நாகராஜ் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதனை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அதில், தனது நிறுவன உரிமையாளர் பணம் பெற்று கொண்டு மோசடி செய்ததாகவும், போலீசாரை பயன்படுத்தி மிரட்டி, தாக்கி கொடுமை செய்ததாகவும் கூறி இருந்தார். மேலும் தனது சாவுக்கு வயாலிக்காவல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சனவுல்லா ஆகியோர் தான் காரணம் என கூறி இருந்தார்.

அந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story