அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. இவர் முந்தைய தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசன் என்பவருக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து அமைச்சரை விடுவித்து கடந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சரை விடுவித்தது சட்டவிரோதம் என்று உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் உள்ளிட்டோர் சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும், வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் சிறப்பு கோர்ட்டு விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் சார்பில் வக்கீல் ராம்சங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பங்கஜ் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஐ.பெரியசாமி சார்பில் வக்கீல் ராம்சங்கருடன் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி, வழக்கின் பின்னணியை குறிப்பிட்டனர்.

வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணையை ஜூலை மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என சிறப்பு கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த உத்தரவுக்கும், சிறப்பு கோர்ட்டில் நடைபெறும் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளனர்.

1 More update

Next Story