மசூதிக்கு வெளியே போராட்டம் நடத்திய விவகாரம்: மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக இருவர் கைது


மசூதிக்கு வெளியே போராட்டம் நடத்திய விவகாரம்: மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக இருவர் கைது
x

டெல்லியில் மசூதிக்கு வெளியே போராட்டம் நடத்தப்பட்ட விவகாரத்தில் முதற்கட்டமாக இருவர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

நபிகள் நாயகம் பற்றி பா.ஜனதா செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், அவர்களை கைது செய்யக்கோரி நேற்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

டெல்லி ஜூம்மா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்துக்கொண்டு வெளியேறியவர்கள், நுபுர் சர்மாவுக்கும், டெல்லி போலீசுக்கும் எதிராக கோஷமிட்டனர். அமைதியாக நடந்த இப்போராட்டம், அரை மணி நேரத்தில் முடிந்தது. எனினும் இந்த போராட்டம் போலீசாரின் அனுமதி இன்றி நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாகக் கூறி, அனுமதியின்றி போராட்டம் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள சிசிடிவி மற்றும் மொபைல் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட இருவரும் ஜமா மஸ்ஜித் பகுதியைச் சேர்ந்த முகமது நதீம் (43), துர்க்மேன் கேட் பகுதியைச் சேர்ந்த ஃபஹீம் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, போராட்டம் நடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவிகளின் காட்சிகளை நாங்கள் ஸ்கேன் செய்து வருகிறோம், மேலும் அதிகமான குற்றவாளிகளை அடையாளம் காண பொதுமக்களால் பதிவுசெய்யப்பட்ட மொபைல் காட்சிகளையும் பார்க்கிறோம். இதனால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்று அவர்கள் கூறினர்.


Next Story