கர்நாடகாவில் எடியூரப்பா வீடு மீது கல்வீச்சு


கர்நாடகாவில் எடியூரப்பா வீடு மீது கல்வீச்சு
x

உள் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாரா சமுதாயத்தினர் சிகாரிபுராவில் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. அப்போது எடியூரப்பாவின் வீடு கல்வீசி தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் மந்திரிசபை கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது.

இடஒதுக்கீடு

இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஒக்கலிகர் சமூகத்திற்கு இடஒதுக்கீட்டு பட்டியலில் 2சி அந்தஸ்தும், லிங்காயத் சமூகத்திற்கு 2டி அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஒக்கலிகர்களுக்கு 6 சதவீதமும், லிங்காயத் சமூகத்திற்கு 7 சதவீத இட ஒதுக்கீடும் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தலித் சமூகத்தில் உள்ள சிறிய சமூகங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்த சமூகத்தில் வலதுசாரி சமூகங்களுக்கு 5½ சதவீதமும், இடதுசாரி சமூகங்களுக்கு 6 சதவீதமும் வழங்கவும், மீதமுள்ள 5½ சதவீதம் அந்த சமூகத்தின் பிரதான பிரிவுகளுக்கு கிடைக்கும் வகையிலும் தீர்மானிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி சதாசிவா அறிக்கை

மேலும் 2பி அந்தஸ்தில் உள்ள மத சிறுபான்மையினருக்கான (முஸ்லிம்) தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அதாவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அதை ரத்து செய்து பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு(இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 4 சதவீதம் இடஒதுக்கீடு, லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமூகங்களுக்கு தலா 2 சதவீதம் என்று பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டார். இந்த இடஒதுக்கீடு அனைத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி சதாசிவா கமிஷன் அறிக்கையின்படியே தீர்மானிக்கப்பட்டதாகவும் முதல்-மந்திரி கூறினார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் 27-ந் தேதி(அதாவது நேற்று) உள் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், சதாசிவா கமிஷன் அறிக்கையை அமல்படுத்தக்கூடாது எனக்கூறியும் பஞ்சாரா சமூக மக்கள் சார்பில் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் கண்டன பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களது கண்டன பேரணிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

பிரதமர் மோடி பேனர் கிழிப்பு

அதன்படி நேற்று காலையில் சிகாரிப்புராவில் உள்ள அம்பேத்கர் சதுக்கத்தில் பஞ்சாரா சமூக மக்கள் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் உள்இடஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து அம்பேத்கர் சதுக்கத்தில் இருந்து சிகாரிப்புராவில் உள்ள மினி விதான சவுதாவுக்கு கண்டன பேரணி நடத்தினர்.

இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த கண்டன பேரணி சிகாரிப்புராவில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான எடியூரப்பாவின் வீட்டின் வழியாக சென்றது. அப்போது பேரணியில் கலந்து கொண்டிருந்த சிலர் எடியூரப்பாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த எடியூரப்பா, பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிடப்பட்ட பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் ஆகியவற்றை கிழித்து எறிந்து சேதப்படுத்தினர்.

போலீசாருடன் வாக்குவாதம்

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக பேரணியில் கலந்து கொண்டிருந்த மேலும் சிலர் வந்தனர். இதனால் போலீசாருக்கும், பேரணியில் பங்கேற்றவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் உடனடியாக அங்கு இரும்பு தடுப்புகள் அமைத்து பேரணி தொடர்ந்து செல்ல தடை விதித்தனர்.

ஆனால் பேரணியில் ஈடுபட்டவர்கள் இரும்பு தடுப்புகளை தள்ளிக்கொண்டு முன்னேறி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த பேரணியில் ஈடுபட்டவர்கள் பதிலுக்கு போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். இதனால் இது கலவரமாக மாறியது.

எடியூரப்பா வீடு மீது கல்வீச்சு

இதையடுத்து போலீசார் தடாலடியாக அனைவர் மீதும் தடியடி நடத்த தொடங்கினர். அப்போது கலவரக்காரர்கள், போலீசார் மீதும், எடியூரப்பாவின் வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதில் எடியூரப்பாவின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் அங்கிருந்த பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள், டயர்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை கலவரக்காரர்கள் தீயிட்டு எரித்தனர். இதனால் அந்த பகுதி கலவர பூமியாக மாறியது. இதையடுத்து உடனடியாக சிவமொக்காவில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இதற்கிடையே போலீசார் மீது கலவரக்காரர்கள் தொடர்ந்து கற்களை வீசி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். கூடுதல் போலீசார் வந்தபிறகு கலவரக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு குவிந்திருந்த கலவரக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் கூட்ட நெரிசலில் ஒரு பெண் சிக்கி கீழே விழுந்தார். அவரை மிதித்துக் கொண்டு ஏராளமானோர் ஓடியதால் அந்த பெண் காயம் அடைந்தார். பின்னர் போலீசார் கலவரக்காரர்களை விரட்டியடித்து அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதையடுத்து கூட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்டு காயம் அடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி போர்க்களம்போல் காட்சி அளித்தது.

144 தடை உத்தரவு அமல்

அந்த பகுதி முழுவதும் கலவரக்காரர்களின் செருப்புகள், அவர்கள் கைகளில் வைத்திருந்த பேனர்கள், கொடிகள் போன்றவை சிதறி கிடந்தன. மேலும் டயர்கள், கொடிகள், பேனர்கள் போன்றவை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. அவற்றை போலீசார், தீயணைப்பு படையினரை வரவழைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிகாரிப்புரா தாசில்தார் விஸ்வநாத், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

மேலும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை அமல்படுத்தினார். சிகாரிப்புரா முழுவதும் 144 தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தாசில்தார் விஸ்வநாத் அறிவித்துள்ளார். மேலும் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எடியூரப்பாவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதல் சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story