தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தர்ணா.. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது


தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தர்ணா.. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது
x

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

புதுடெல்லி:

சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமான வரித்துறை ஆகிய 4 மத்திய விசாரணை அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற வேண்டும் எனக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என 10 பேர் கொண்ட குழுவினர், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வெளியே இன்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையர்களை சந்தித்துவிட்டு வெளியேறுமாறு காவல்துறை தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. பலமுறை கோரிக்கை விடுத்தும் தலைவர்கள் ஏற்க மறுத்து தர்ணாவை தொடர்ந்ததால், போலீசார் நடவடிக்கை எடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன என்றும், குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பா.ஜ.க. பயன்படுத்துவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.


Next Story