புதுச்சேரி சிறுமி கொலை: ராகுல் காந்தி கடும் கண்டனம்


புதுச்சேரி சிறுமி கொலை: ராகுல் காந்தி கடும் கண்டனம்
x

புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாயமான பள்ளி மாணவி அங்குள்ள கால்வாயில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில் இந்த வழக்கில் புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டில் மகள்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன..?

2022ல் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.5 லட்சம் குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன, அதில் 31 ஆயிரம் வழக்குகள் கற்பழிப்பு மட்டுமே.

உத்தரகாண்டில் சாலையில் அமர்ந்திருக்கும் அங்கிதா பண்டாரியின் குடும்பமாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்காததால் குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவனாக இருந்தாலும் சரி, ஜார்கண்டில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான ஸ்பெயின் சுற்றுலா பயணியாக இருந்தாலும் சரி.

இதுபோன்ற ஒவ்வொரு சம்பவமும் ஒரு உணர்வற்ற அமைப்பு மற்றும் கொடூரமான சமூகத்தின் பிரதிபலிப்பாகும், இது ஒரு தேசமாக நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயம். பெண்களுக்கான பாதுகாப்பும், மரியாதையும் தான் வளர்ந்த தேசத்தின் அடையாளம்" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.


Next Story