புல்வாமா தாக்குதலில் வீரமரணம்: சாக அனுமதி கோரி விதவை மனைவிகள் தர்ணா போராட்டம்


புல்வாமா தாக்குதலில் வீரமரணம்:  சாக அனுமதி கோரி விதவை மனைவிகள் தர்ணா போராட்டம்
x

ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் மனைவிகள் தங்களது வாழ்வை முடித்து கொள்ள அனுமதி கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஜெய்ப்பூர்,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது, பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் வீரமரணமடைந்தனர். இதற்கு இந்தியா தரப்பில் பதிலடியும் தரப்பட்டது.

இந்நிலையில், வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் மனைவிகளான, மஞ்சு ஜாட், மதுபாலா, சுந்தரி தேவி உள்ளிட்ட 3 பேரும் ஷாகீத் ஸ்மராக் பகுதியில் கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநில அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அவர்கள் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர். இதனால், அவர்கள் 3 பேரும் கவர்னர் கல்ராஜ் மிஷ்ராவை நேரில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில், தங்களது வாழ்வை முடித்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். இதனை பா.ஜ.க. மேலவை எம்.பி. கிரோதி லால் மீனா கூறியுள்ளார். அவரும், சி.ஆர்.பி.எப். வீரர்களின் மனைவிகளும் கவர்னரை சந்தித்த பின்னர், முதல்-மந்திரி இல்லத்திற்கு செல்ல முயன்றனர்.

ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர் என கூறப்படுகிறது. இதுபற்றி கிரோதி லால் கூறும்போது, போலீசார் அந்த பெண்களை தள்ளி விட்டதில் வீரர் ரோகிதசாவ் லம்பாவின் மனைவி மஞ்சு ஜாட்டுக்கு காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

வீரமரணம் அடைந்தவர்களின் மனைவிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக சர்வாதிகார போக்குடன் அரசு நடக்கிறது என அவர் கூறியுள்ளார். வீரர்களின் குடும்பத்தினருடன் அவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.


Next Story