எம்.எல்.ஏ.க்களிடம் பண பேரம் நடத்துவதாக பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி புகார்: பஞ்சாப் போலீசார் வழக்குப்பதிவு


எம்.எல்.ஏ.க்களிடம் பண பேரம் நடத்துவதாக பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி புகார்: பஞ்சாப் போலீசார் வழக்குப்பதிவு
x

கோப்புப்படம்

பஞ்சாபில் தங்களது எம்.எல்.ஏ.க்களிடம் பண பேரம் நடத்துவதாக பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்ததைத்தொடர்ந்து அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தில், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அந்த அரசை கவிழ்க்க பா.ஜனதா முயன்று வருவதாக அம்மாநில நிதி மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஹர்பால்சிங் சீமா நேற்று குற்றம் சாட்டி இருந்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், டெல்லி ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்தவுடன் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயன்று வருகிறது. இதற்காக பா.ஜனதா ஏற்பாடு செய்த சிலர், 7 முதல் 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். கட்சி மாறி வந்தால், தலா ரூ.25 கோடி தருவதாகவும், பா.ஜனதா ஆட்சி அமைத்தால் மந்திரி பதவி அளிப்பதாகவும் பேரம் பேசினர். தங்களுடன் கூடுதலாக எம்.எல்.ஏ.க்களை அழைத்து வந்தால், இன்னும் அதிக பணம் அளிப்பதாகவும் கூறியுள்ளனர். டெல்லியில், பெரிய தலைவர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக, எம்.எல்.ஏ.க்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நேரம் வரும்போது இதற்கான ஆதாரத்தை வெளியிடுவோம் என்று ஹர்பால்சிங் சீமா தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் பஞ்சாபில் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில் 10 எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசியதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பாஜகவின் 'ஆபரேஷன் தாமரை' டெல்லியில் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாஜக தற்போது பஞ்சாபைக் குறிவைத்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 10 சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பாஜக பேரம் பேசியுள்ளது. முக்கியத் தலைவர்களை சந்தித்துப் பேச தலைநகரான டெல்லிக்கு எம்.எல்.ஏ.க்களை அழைத்துள்ளது. அவர்கள் (பாஜகவினர்) மக்கள் வாக்குகளைப் பெறாமல், வெற்றி பெற்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றனர்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இந்நிலையில் பஞ்சாபில் தங்களது எம்.எல்.ஏ.க்களிடம் பண பேரம் நடத்துவதாக பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்ததைத்தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகிய பிரிவுகளின் கீழ் மொகாலி மாநில குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதன்மைக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகவும், நிலையான வழிகாட்டுதல்களின்படி விசாரணை விஜிலென்ஸ் பீரோவுக்கு மாற்றப்படும் என்றும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


Next Story