பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் குஜ்ரான் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்தனர்.
பின்னர் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் விஷ சாராயம் குடித்ததால் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சாராயம் குடித்த மேலும் 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இந்த சாராயம் குடித்ததில் மேலும் 4 பேர் தற்போது சங்ரூர் சிவில் மருத்துவமனையிலும், 5 பேர் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் கைது செய்யப்பட்ட மன்பிரீத் சிங் என்பவர் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.