'என் மீது என்ன நடவடிக்கை என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்' - காங்கிரஸ் மேலிடத்துக்கு அமரிந்தர் சிங்கின் மனைவி பதிலடி
மத்திய-மாநில மந்திரிகளை தொடர்ந்து சந்திப்பேன் என்றும் தன் மீது என்ன நடவடிக்கை என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அமரிந்தர் சிங்கின் மனைவி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி., பிரனீத் கவுர். முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரியும், தற்போதைய பா.ஜனதா மூத்த தலைவருமான அமரிந்தர் சிங்கின் மனைவியான இவர், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து இவரை கடந்த வாரம் காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்து கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்தது. அத்துடன் கட்சி விரோத செயல்களுக்காக விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது. கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் செயலாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான தாரிக் அன்வர் இந்த நோட்டீசை அனுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள கவுர், தனக்கு எதிராக கட்சி மேலிடம் விரும்பும் எந்த நடவடிக்கை என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர், 'எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் நான் எப்போதும் எனது தொகுதி மக்கள் மற்றும் எனது பஞ்சாப் மாநிலத்திற்காக நின்று பிரச்சினைகளை எடுத்துரைப்பேன். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எனது தொகுதி பிரச்சினைக்காக மாநில மற்றும் மத்திய மந்திரிகளை தொடர்ந்து சந்திப்பேன்' என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு நோட்டீஸ் அனுப்பிய தாரிக் அன்வரையும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.