பாதயாத்திரை தொடர்பான வழக்கில் ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி


பாதயாத்திரை தொடர்பான வழக்கில் ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி
x

கே.ஜி.எப். பட பாடலை பயன்படுத்திய விவகாரத்தில், அதுதொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரிய ராகுல் காந்தியின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கே.ஜி.எப். பட பாடலை பயன்படுத்திய விவகாரத்தில், அதுதொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரிய ராகுல் காந்தியின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

காப்புரிமை சட்டம்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை தொடர்பான வீடியோவுக்கு கே.ஜி.எப்.-2 பட பாடலை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பயன்படுத்தியது. இதற்கு எதிராக அந்த படத்தின் பாடல்களுக்கு ஒளிபரப்பு உாிமம் பெற்ற எம்.ஆர்.டி. இசை நிறுவனம் போலீசில் புகார் அளித்தது.

ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது. தங்கள் நிறுவனத்தின் அனுமதி பெறாமல், காப்புரிமை சட்டத்தை மீறி தங்களின் பாடலை பயன்படுத்தியதாக புகாரில் கூறப்பட்டது. பெங்களூரு கோர்ட்டு உத்தரவின் பேரில் ராகுல் காந்தி உள்பட 3 பேரின் மீதும் யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மனு தள்ளுபடி

இதுகுறித்த விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கள் மீதான கே.ஜி.எப். பட பாடல் வழக்கை ரத்து செய்யுமாறு கோரப்பட்டது. இந்த மனு மீது நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 23-ந் தேதி இறுதி விசாரணை முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய நீதிபதி நாகபிரசன்னா, காங்கிரஸ் தலைவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story