என்னை சிறையில் தள்ளினாலும் அச்சமில்லை; எந்தவித மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன் - ராகுல் காந்தி


என்னை சிறையில் தள்ளினாலும் அச்சமில்லை; எந்தவித மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன் - ராகுல் காந்தி
x

எம்.பி. பதவி பறிப்புக்கு பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அவர், “எந்தவித மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன்; சிறையில் தள்ளினாலும் அச்சமில்லை” என்று ஆவேசமாக கூறினார்.

பிரதமர் மோடி பற்றி கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது.

ராகுல் பதவி பறிப்பு

கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்த அவதூறு பேச்சு குறித்து குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.

சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 23-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு வந்த சூட்டோடு சூடாக மறுநாளிலேயே (24-ந் தேதி) ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் பறித்து, நாடாளுமன்ற மக்களவை செயலகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், பேசுபொருளாகாவும் மாறி உள்ளது.

பிரதமர் கண்களில் பயம்

இந்த பதவி பறிப்பு நடவடிக்கைக்கு பின்னர் முதல் முறையாக டெல்லியில் நேற்று மதியம் ராகுல் காந்தி நிருபர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆவேசமாக கூறியதாவது:-

அதானி விவகாரத்தில் எனது பேச்சால் பிரதமர் மோடி பயந்துபோனதால்தான், எனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய அரசு பீதி அடைந்து, அந்த உணர்வில் இருந்து மக்களைத் திசை திருப்புவதற்காகத்தான் இந்த பதவி பறிப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

எனது அடுத்த பேச்சு குறித்த பிரதமரின் பயத்தால்தான், என் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நான் அவரது கண்களில் இந்த பயத்தைப் பார்த்துள்ளேன். அடுத்து நான் என்ன பேசுவேனோ என்று அவர் பயந்ததுடன், இந்த பேச்சு நாடாளுமன்றத்தில் அமைவதை அவர் விரும்பவில்லை.

அதானியின் போலி நிறுவனங்களில் ரூ.20 ஆயிரம் கோடியை முதலீடு செய்தது யார் என்ற எனது முக்கிய கேள்வி இன்னும் அப்படியேதான் உள்ளது. இந்த பணம் எங்கிருந்து வந்தது? இந்த பணம் யாருடையது? இதில் சீன நாட்டினர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது.

மந்திரிகள் பொய் குற்றச்சாட்டு

எனக்கு எதிராக நரேந்திர மோடி அரசின் மந்திரிகள் அனைவரும் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள். அதானி விவகாரத்தில் இருந்து திசை திருப்பத்தான் இத்தகைய கூற்றுகளை அவர்கள் கூறுகிறார்கள்.

நான் வெளிநாட்டுச்சக்திகளின் உதவியைக் கோரினேன் என்று அவர்கள் சொன்னார்கள். இது மிகவும் அபத்தமான குற்றச்சாட்டு. நான் ஒருபோதும் அப்படி கோரவில்லை.

நாடாளுமன்றத்தில் ஒரு மந்திரி பொய் சொன்னார். என் மீது ஒரு குற்றச்சாட்டை ஒருவர் கூறுகிறபோது, என் தரப்பு நிலைப்பாட்டைக் கூறும் உரிமை எனக்கு இருக்கிறது என்று சபாநாயகருக்கு கடிதம் எழுதினேன். முதல் கடிதத்துக்கு பதில் வரவில்லை. நான் கூடுதல் விவரங்களுடன் இரண்டாவது கடிதத்தை எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. எனவே நான் சபாநாயகரை அவரது அறைக்கு சென்று சந்தித்தேன். நீங்கள் ஜனநாயகத்தின் பாதுகாவலர்; என் தரப்பு நியாயத்தைச் சொல்வதற்கு நான் பேசுவதற்கு ஏன் அனுமதி தர மறுக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் அதைச் செய்ய முடியாது என்று கூறினார்.

'பயப்பட மாட்டேன்'

இந்திய நாட்டு மக்களின் ஜனநாயக குரலைப் பாதுகாக்கத்தான் நான் இங்கே இருக்கிறேன். என்னை தகுதி நீக்கம் செய்வதாலோ, எந்தவித மிரட்டல்களாலோ, சிறையில் தள்ளுவதாலோ நான் நின்றுவிடுவேன் என்றும், அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு என்று கேட்பதை நான் றிறுத்திவிடுவேன் என்றும் அவர்கள் நினைக்கலாம்.

ஆனால் நான் அவ்வாறு நிறுத்தமாட்டேன். பயப்படவும் மாட்டேன். தொடர்ந்து கேள்வி கேட்பேன்.

இன்னும் இவர்கள் (பா.ஜ.க.வினர்) என்னைப் புரிந்து கொள்ளவில்லை. நான் இவர்களைக் கண்டு பயந்து விடவில்லை. நான் அதைத் தொடர்ந்து செய்வேன். இத்தகைய மிரட்டல்கள், பதவி பறிப்புகள், குற்றச்சாட்டுகள், சிறை தண்டனைகளால் எனக்கு அச்சம் இல்லை.

நாடாளுமன்றத்தில் சரியான ஆவணங்களுடன் பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு பற்றி கூறினேன். ஆனால் அந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விட்டனர்.

திரும்ப எம்.பி. பதவி கிடைக்குமா?

எனது எம்.பி. பதவி திரும்பவும் வந்து விடும் என்று நம்பிக்கை இருக்கிறதா என கேட்கிறீர்கள். நம்பிக்கையில் எனக்கு விருப்பம் இல்லை.

நான் எனது எம்.பி. பதவியை மீண்டும் பெறுகிறேனோ, இல்லையோ, நான் எனது வேலையைத் தொடர்ந்து செய்வேன். என்னை அவர்கள் நிரந்தரமாகவே தகுதி நீக்கம் செய்தாலும், நான் எனது பணியைச் செய்வேன். அவர்கள் என்னை மீண்டும் எம்.பி. பதவியில் அமர்த்தினாலும், என் வேலையைச் செய்வேன். நான் நாடாளுமன்றத்துக்கு உள்ளே இருக்கிறேனா, வெளியே இருக்கிறேனா என்பது முக்கியம் இல்லை. நான் எனது வேள்வியைச் செய்வேன். நான் அதைத் தொடர்ந்து செய்வேன்.

எதிர்க்கட்சிகளுக்கு நன்றி

நாடாளுமன்றத்தில் இருந்து நிரந்தரமாகவே வாழ்நாளெல்லாம் என்னை தகுதி நீக்கம் செய்தாலும், என்னைச் சிறையில் தள்ளினாலும், அதெல்லாம் என்னில் எந்த மாறுபாட்டையும் ஏற்படுத்தாது. நான் தொடர்ந்து முன்னோக்கி நடைபோடுவேன்.

எனக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

'நாடு என்றால் அதானி, அதானி என்றால் நாடு'

எனது பதவி பறிப்பின் பின்விளைவுகள் பற்றி கேட்கிறீர்கள். பிரதமர் மோடியின் பீதி எதிர்வினையால், எதிர்க்கட்சிகள் பெரும் பலனை அடையும்.

நான் உண்மைக்காகத் தொடர்ந்து போராடுவேன். உண்மை வெளிவந்துவிடுமோ என்ற பீதியான மன நிலையில் அவர்கள் உள்ளனர். அவர்கள் எதிர்க்கட்சியிடம் மிகப்பெரிய ஆயுதத்தைத் தந்துள்ளனர். ஏனென்றால், மக்கள் தங்கள் மனதில் ஒரு கேள்வியைக் கொண்டுள்ளனர். அதானி ஊழல்வாதி என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். இதில் எழுகிற கேள்வி, இந்த ஊழல்வாதியை பிரதமர் ஏன் காப்பாற்றுகிறார் என்பதுதான்.

நாட்டின் ஜனநாயக இயல்பினைப் பாதுகாக்க நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன். இதன் அர்த்தம் என்னவென்றால், அது நாட்டின் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதாகும். அது, நாட்டின் ஏழை மக்கள் குரல்களைப் பாதுகாப்பதாகும். அது, அடிப்படையில் பிரதமருடனான உறவை சீரழிக்கிற அதானி போன்றவர்களைப் பற்றிய உண்மையை நாட்டு மக்களுக்கு சொல்வதாகும்.

மத்திய பா.ஜ.க. அரசைப் பொறுத்தமட்டில், நாடு என்பது அதானிதான். அதானிதான் நாடு.

அவதூறு வழக்கின் மையம்

அவதூறு வழக்கின் மையமாக அமைந்துள்ள, 2019-ம் ஆண்டு நான் கூறிய கருத்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (குறிப்பாக மோடி சமூகத்தினரை) அவமதிக்கும் வகையில் இருந்தன என்ற பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு பற்றி கேட்கிறீர்கள்.

நான் எப்போதும் சகோதரத்துவத்தைப் பற்றி பேசுகிறேன். இங்கே பிரச்சினை, இதர பிற்பட்ட வகுப்பினர்களைப் பற்றியது அல்ல. பிரச்சினை அதானி மற்றும் மத்திய அரசுடனான உறவுகளைப் பற்றியது ஆகும்.

வழக்கு பற்றி...

நான் தண்டிக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கு ஒரு சட்ட விவகாரம் ஆகும். இதுபற்றி நான் கருத்து கூற மாட்டேன்.

நாட்டின் ஜனநாயகம் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அது தொடர்பான உதாரணங்கள் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

இந்த பேட்டியின்போது ராகுல் காந்தியுடன் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெல்லாட், சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story