வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி


வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி
x

File image

வயநாட்டில் பேரிடருக்காக நிவாரண நிதியுதவியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமங்கள் மட்டுமின்றி, அதன் அருகே இருந்த அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளிரிமலை கிராமங்களும் நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. நிலச்சரிவின் கோரதாண்டவத்தால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் கிராம மக்கள் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போனார்கள்.

நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். மண்ணில் புதைந்தவர்கள், காணாமல் போனவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 405 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 180 பேரை காணவில்லை. சூரல்மலை கிராமம் மற்றும் முண்டக்கை, அட்டமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 4,833 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில்,வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் அவர் பேசியதாவது, "சில நாள்களுக்கு முன்பு, எனது சகோதரியுடன் வயநாடுக்கு சென்றேன். அங்கு சோகத்தால் நிறைந்த வலியையும், வேதனையையும் என் கண்களால் பார்த்தேன். 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், ராணுவம், கடற்படை, விமானப்படை, தீயணைப்புத்துறை மற்றும் அண்டை மாநிலங்களாக கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளிட்டவைகளின் உதவிகளை நான் பாராட்ட விரும்புகிறேன். இது மிகப் பெரிய சோகம். வயநாட்டில் பேரிடரை தாங்கக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்கவும், மக்களின் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கவும் நிதியுதவியை விடுவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த வாரம் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன்பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story