சீன விவகாரத்தில் சர்ச்சை கருத்து: 'ராகுல் காந்தி, நாட்டுக்கே அவமானம்' - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ


சீன விவகாரத்தில் சர்ச்சை கருத்து: ராகுல் காந்தி, நாட்டுக்கே அவமானம் - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ
x

சீன விவகாரம் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட ராகுல் காந்தி, நாட்டுகே அவமானம் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ சாடி உள்ளார்.

ராகுல் கருத்தால் ஆத்திரம்

அருணாசலபிரதேச மாநிலத்தில், தவாங் செக்டரில் யாங்ட்சி பகுதியில் கடந்த 9-ந் தேதி சீனப் படை வீரர்கள் எல்லைக்குள் ஊடுருவி எல்லை நிலைமையை தன்னிச்சையாக மாற்ற முயற்சித்தனர். அவர்களுக்கு இந்தியப் படைவீரர்கள் சரியான பதிலடி கொடுத்ததால், சீனப்படையினர் பின்வாங்கி ஓட்டம் எடுத்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையின் இடையே நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார்.

அப்போது அவர், " சீனா போருக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது; ஆனால் மத்திய அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. சீன அச்சுறுத்தலை அது புறக்கணிக்க முயற்சிக்கிறது" என சாடினார். மேலும், " சீனா இந்தியப் பகுதியில் இருந்து 2 ஆயிரம் ச.கி.மீ. பகுதியை கையகப்படுத்தி கொண்டு விட்டது. 20 இந்திய வீரர்களை கொன்று விட்டது, அருணாசலபிரதேசத்தில் நமது வீரர்களை அடித்து நொறுக்குகிறது" எனவும் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்து விட்டது.

நாட்டுக்கே அவமானம்

இதுபற்றி மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ டுவிட்டரில் ஒரு ஆவேச பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், "ராகுல் காந்தி இந்திய ராணுவத்தை மட்டும் அவமதிக்கவில்லை. நாட்டின் புகழையே கெடுக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் பிரச்சினை அல்ல. அவர் நாட்டுக்கே பெருத்த அவமானம்" என தெரிவித்துள்ளார்.

'நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'

கன்னாஜில் மன்னனாக இருந்து, வரலாற்றின் பக்கங்களில் இந்தியாவின் துரோகி என அடையாளம் காட்டப்பட்டுள்ள ஜெய்சந்த் என்ற மன்னனுடன் ராகுல் காந்தியை பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா ஒப்பிட்டுள்ளார்.

இதையொட்டி அவர் மேலும் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் கார்கே தான் 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் இயக்கப்படவில்லை என்றால், நாட்டோடு காங்கிரஸ் கட்சி இணைந்து நிற்கிறது என்றால், அற்பத்தனமானதும், இந்திய படைகளின் மன உறுதியைக் குலைக்கிறதுமான கருத்துக்களை வெளியிட்ட ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

ராகுல் காந்தி தனது கருத்துக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த மன்னிப்பால் அவரது பாவம் கழுவப்பட்டு விடாது. ஆனால் குறைந்தபட்சம் அவர் தனது தவறை உணர்ந்ததையாவது இது காட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story