மைசூருவில் பயங்கரவாதி தங்கியிருந்த வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை


மைசூருவில் பயங்கரவாதி தங்கியிருந்த வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:46 PM GMT)

மைசூருவில், பயங்கரவாதி தங்கியிருந்த வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு:

மைசூருவில், பயங்கரவாதி தங்கியிருந்த வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிய வீடு

மங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய பயங்கரவாதி முன்னதாக மைசூருவில் சிறிய வீட்டில் தங்கி இருந்தார். அவர் தங்கி இருந்த வீடு மைசூரு டவுன் மேட்டுஹள்ளி லோகநாயக்கா நகர் 10-வது தெருவில் அமைந்துள்ளது. அது மோகன்குமார் என்பவருக்கு சொந்தமானது ஆகும். அதாவது மோகன்குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பின்புறம் அந்த சிறிய வீடு அமைந்திருந்தது.

அது சிறிய அறை ஆகும். அங்குதான் அந்த பயங்கரவாதி வாடகைக்கு தங்கி இருந்துள்ளார். மேலும் அவர் ஒரு மாதத்திற்கு முன்புதான் அங்கு குடிவந்தார். அதுமட்டுமின்றி அவர் இதுவரை வாடகையும் கொடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது மோகன்குமாரை போலீசார் தங்கள் பிடியில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

மாதம் ரூ.1,800 வாடகைக்கு...

மோகன்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 'நான் எனது வீட்டின் பின்புறம் உள்ள எனக்கு சொந்தமான சிறிய வீட்டை வாடகைக்கு விட திட்டமிட்டு இருந்தேன். அதுபற்றி அறிந்த பயங்கரவாதி என்னிடம் வந்து வீடு வாடகைக்கு கிடைக்குமா? என்று கேட்டார். அவர் கேட்டதன்பேரில் மாதம் ரூ.1,800 வாடகையில் அந்த சிறிய வீட்டை வாடகைக்கு விட்டேன். அப்போது அவரிடம் இருந்து ஆதார் கார்டை வாங்கி சரிபார்த்தேன்.

அதில் அவரது பெயர் பிரேம் ராஜ் என்றும், அவரது தந்தை பெயர் மாருதி என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் உப்பள்ளி முகவரி இடம்பெற்று இருந்தது. நான் என்ன வேலை செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது அவர் வியாபாரம் செய்வதாக கூறினார். அதுமட்டுமே எனக்கு தெரியும். மற்றபடி அவரைப்பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியாது' என மோகன்குமார் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணர்

மேலும் பயங்கரவாதி தங்கியிருந்த வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் அங்கிருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்த தேவையான வயர்கள், டெட்டனேட்டர்கள், மல்டி மீட்டர்கள், சர்க்கியூட் போர்டுகள், ஏராளமான செல்போன்கள், சிம்கார்டுகள், போல்ட்டுகள், நட்டுகள், பேட்டரிகள், டைமர்கள், அலுமினிய தகடுகள், சர்க்கியூட் வரைபடங்கள், 2 ஆதார் கார்டுகள், 2 பான் கார்டுகள், ஒரு கிரெடிட் கார்டு, 2 டெபிட் கார்டுகள், ரப்பர் சீட்டுகள், ஒரு கேமரா, நோட்டு-புத்தகங்கள், பிரசர் குக்கர்கள், மிக்சர் ஜார்கள், மரத்துகள்கள், செல்போன் டிஸ்பிளேகள், சல்பியூரிக் ஆசிட் உள்ளிட்ட வெடிகுண்டு தயாரிப்பு பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

அவற்றைக் கொண்டு அவர் சிறிய அளவில் வெடிகுண்டு தயாரித்து வந்ததாகவும், அவர் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணர் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

பெங்களூருவுக்கு செல்வதாக...

மேலும் அவர் மைசூருவில் தன்னுடன் தங்கி இருந்த பாபுராமிடம், தான் பெங்களூருவுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் அவர் மைசூருவில் இருந்து மங்களூருவுக்கு பஸ் மூலம் வந்து, அங்கிருந்து படீல் பகுதிக்கு டவுன் பஸ்சில் வந்துள்ளார்.

அதையடுத்து அவர் படீல் பகுதியில் இருந்து பம்ப்வெல் பகுதிக்கு ஆட்டோவில் பயணித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story