பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த மத்திய அரசு அனுமதி
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு சர்.எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் நிலையம் ரூ.314 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் அமைந்திருக்கும் ரெயில் நிலையங்களை விமான நிலையம் தோற்றத்தில் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த மத்திய அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி சிட்டி ரெயில் நிலையத்தை சர்.எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையம் போல் மாற்றும் திட்டத்திற்கு மத்திய ரெயில்வே அமைச்சம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான பணிகளுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவுடன், டெண்டர்கள் கோரப்பட உள்ளது. இந்த நிலையில் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை முதலில் முடிக்குமாறு பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் கூறுகையில், சிட்டி ரெயில் நிலையத்தில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் பாதிப்பு உள்ளது. காத்திருப்போர் அறை, டிக்கெட் கவுண்ட்டர்கள், சுத்தமான குடிநீர் போன்றவற்றை முதலில் செய்து முடிக்க வேண்டும் எனவும், ரெயில்களின் கால தாமதத்தை சரிசெய்யவும் கூறி உள்ளனர். மேலும், ரெயில்கள் புறப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் மக்களை சேரும் வகையில் கூடுதல் திரைகளை அமைக்க வேண்டும் என்றனர்.