ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி மாற்றத்திற்கு இதுதான் காரணம்...!!
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி மாற்றத்திற்கான காரணம் வெளியிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.
சத்தீஷ்காரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலுங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23 அன்றும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதிக்கு பதிலாக 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி மாற்றத்திற்கான காரணம் வெளியிடப்பட்டு உள்ளது. நவம்பர் 23ம் தேதி முகூர்த்த நாள் என்பதாலும், மாநிலம் முழுவதும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவதாலும், அதேபோல் சமூகம் சார்ந்த பல விழாக்கள் அன்றைய தினம் நடைபெறுவதாலும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று நவம்பர் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.