ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு


ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. பா.ஜ.க. மேலும் 83 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான, 33 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.

இந்த பட்டியலில் முதல்-மந்திரி அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும், சச்சின் பைலட் டோங் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

9 பெண் வேட்பாளர்கள்

சச்சின் பைலட்டுடன் இணைந்து கடந்த 2020-ம் ஆண்டு கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 3 தலைவர்களுக்கும் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

9 பெண் வேட்பாளர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும் நடப்பு 5 மந்திரிகள், நடப்பு எம்.எல்.ஏ.க்கள் 28 பேர் ஆகியோருடன், கடந்த தேர்தலில் வென்ற ஒரு சுயேச்சை வேட்பாளருக்கும் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இன்னும் பெரும்பான்மையான இடங்களுக்கான வேட்பாளர் விவரங்களை காங்கிரஸ் அறிவிக்கவில்லை. இக்கட்சியின் மத்திய தேர்தல் குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூடி, மேலும் பல தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பா.ஜ.க. 83 பேர் பட்டியல்

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான மேலும் 83 வேட்பாளர் பட்டியலை மாநில பா.ஜ.க. நேற்று வெளியிட்டது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, தனது பாரம்பரிய தொகுதியான ஜல்ரபதானில் மீண்டும் போட்டியிடுகிறார்.

பா.ஜ.க.வின் 83 வேட்பாளர்கள் பட்டியலில் 50 நடப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 9 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த 2-வது பட்டியலில் எம்.பி. எவரும் இடம்பெறவில்லை.

இதுவரை 124 வேட்பாளர் விவரங்கள்

ராஜஸ்தான் பா.ஜ.க. மூத்த தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தின் மருமகனும், 5 முறை எம்.எல்.ஏ.வுமான நர்பாத் சிங் ராஜ்வி, முந்தைய பட்டியலில் இடம்பெறவில்லை. இதுகுறித்து எதிர்ப்பு கிளம்பியநிலையில், ராஜ்விக்கு இந்த பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 83 பேர் பட்டியலில், 10 பெண் வேட்பாளர்களும் அடங்குவார்கள்.

இப்பட்டியலுடன், பா.ஜ.க. இதுவரை 124 வேட்பாளர் விவரங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story