ராஜஸ்தான் முதல்-மந்திரியின் கார் கழிவுநீர் கால்வாயில் சிக்கியதால் பரபரப்பு


ராஜஸ்தான் முதல்-மந்திரியின் கார் கழிவுநீர் கால்வாயில் சிக்கியதால் பரபரப்பு
x

Image Courtesy : PTI

காரில் ராஜஸ்தான் முதல்-மந்திரியும், அவரது மனைவியும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து அம்மாநில முதல்-மந்திரியாக பஜன்லால் சர்மா கடந்த 15-ந்தேதி பதவியேற்றார். முதல்-மந்திரியாக பதவியேற்ற பின், முதல் முறையாக அவரது சொந்த ஊரான பரத்பூருக்கு நேற்றைய தினம் பஜன்லால் சர்மா சென்றார்.

இதையடுத்து முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, தனது மனைவியுடன் உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிரிராஜ் கோவிலுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது உத்தர பிரதேசம்-ராஜஸ்தான் எல்லையில் உள்ள புஞ்சாரி என்ற பகுதியில் சென்றபோது, முதல்-மந்திரியின் கார் சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயில் சிக்கி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரின் முன்பக்க டயர் கழிவுநீர் கால்வாயில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து முதல்-மந்திரி பஜன்லால் சர்மா மற்றும் அவரது மனைவி இருவரும் மற்றொரு காரில் ஏறி பத்திரமாக மதுரா சென்றடைந்ததாகவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பரத்பூர் எஸ்.பி. மிருதுல் கச்சாவா தெரிவித்துள்ளார்.


Next Story