பீகாரை தொடர்ந்து ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு - முதல் - மந்திரி அசோக் கெலாட்


பீகாரை தொடர்ந்து ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு - முதல் - மந்திரி அசோக் கெலாட்
x

பீகாரை தொடர்ந்து ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு

இதர பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிந்து அவர்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை தீவிரமாக கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கையாக இது அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்து உள்ளது. இதற்கிடையே பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதாதள கூட்டணி அரசு, மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

உயர்மட்டக்குழு கூட்டம்

இது சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை மேலும் வலுப்படுத்தி உள்ளது. பீகாரை பின்பற்றி பல மாநிலங்களும் தனித்தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டு வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தானில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக விவாதிக்க மாநில காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூடியது. இதில் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதை முதல்-மந்திரி அசோக் கெலாட் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எளிதாக திட்டங்கள் தயாரிக்கலாம்

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பீகாரில் நடத்தப்பட்டதுபோல ராஜஸ்தான் அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்தாகும். எனவே, கட்சியின் ஆணையை மனதில் வைத்து, ராஜஸ்தானில் இதை மேற்கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம்' என்று கூறினார். மேலும் அவர், 'நாட்டில் ஏராளமான சாதிகள் உள்ளன. பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் வசிக்கின்றனர். வெவ்வேறு சாதியினர் வெவ்வேறு பணிகளை செய்கிறார்கள். எந்தெந்த சாதியின் மக்கள் தொகை எவ்வளவு என்று தெரிந்து கொண்டால், அவர்களுக்காக என்னென்ன திட்டங்களைச் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். சாதி வாரியாக திட்டங்களை தயாரிப்பது நமக்கு எளிதாக இருக்கும்' என்றும் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு மத்தியில் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story