'இந்தியாவின் கவுரவத்தை கெடுக்க நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம்' - சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை


இந்தியாவின் கவுரவத்தை கெடுக்க நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம் - சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 April 2024 1:08 PM GMT (Updated: 9 April 2024 1:09 PM GMT)

கவுரவத்தை கெடுக்க நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் பலம் நம்மிடம் உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயர்களை மாற்றம் செய்து சீன அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சீனாவின் இந்த நடவடிக்கையை நிராகரித்த இந்திய அரசு, அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்று தெரிவித்தது.

இந்த நிலையில், 'இந்தியாவின் கவுரவத்தை கெடுக்க நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம்' என சீனாவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அருணாச்சல பிரதேசம் நம்சாய் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கூறியதாவது;-

"அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயர்களை மாற்றி சீன அரசு அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. பெயர்களை மாற்றுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. சீனாவில் உள்ள சில மாகாணங்களின் பெயர்களை நாம் மாற்றிவைத்தால், அவை இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளாக மாறிவிடுமா?

நண்பர்கள் மாறுவார்கள், ஆனால் அக்கம்பக்கத்தினர் மாறுவதில்லை என வாஜ்பாய் கூறுவார். நமது அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேண வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம். ஆனால் நமது கவுரவத்தை யாராவது கெடுக்க நினைத்தால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் பலம் தற்போது நம்மிடம் உள்ளது."

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Next Story