மாநிலங்களவையில் பா.ஜ.க. பலம் 95-ல் இருந்து 92 ஆகிறது; காங்கிரஸ் பலம் 29-ல் இருந்து 31 ஆக உயர்வு
மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம், 95-ல் இருந்து 92 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான காங்கிரசின் பலம் 29-ல் இருந்து 31 ஆக அதிகரித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக இருந்த 57 எம்.பி. பதவிகளுக்கு தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதில் தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மராட்டியம், கர்நாடகம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் மூலம் 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி உள்ள தாக்கங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வருமாறு:-
பா.ஜ.க.- காங்கிரஸ் பலம்
* 57 எம்.பி. பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. 22 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 9 இடங்கள் கிடைத்துள்ளன.
* மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம், 95-ல் இருந்து 92 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான காங்கிரசின் பலம் 29-ல் இருந்து 31 ஆக அதிகரித்துள்ளது.
* பா.ஜ.க., காங்கிரஸ் என ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி புதிய முகங்களை மாநிலங்களவைக்கு கொண்டு வருகின்றன.
* பா.ஜ.க.வின் பலத்தில் 4 நியமன எம்.பி.க்களும் சேருவார்கள். இன்னும் 7 நியமன இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. இந்த இடங்களில் நியமனங்களை செய்கிறபோது, அவர்களும் பா.ஜ.க.வையே ஆதரிப்பார்கள்.
* இப்போது நடந்து முடிந்துள்ள மாநிலங்களவை தேர்தலில் அரியானாவில் பா.ஜ.க. ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ள சுயேச்சை வேட்பாளர் கார்த்திக்கேய சர்மா, பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பார்.
* ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் பலம், மாநிலங்களவையில் 6-ல் இருந்து 9 ஆக உயர்கிறது.
* ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி, பஞ்சாபில் இருந்து மாநிலங்களவையில் 10 எம்.பி.க்களைப் பெற்றிருப்பார்கள்.
தி.மு.க. - அ.தி.மு.க. பலம்
* மாநிலங்களவையில் தி.மு.க.வுக்கு 10 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இது தொடர்கிறது.
* பிஜூ ஜனதா தளம்-9, தெலுங்கானா ராஷ்டீர சமிதி-7, ஐக்கிய ஜனதாதளம்-5, தேசியவாத காங்கிரஸ்-4, சிவசேனா-3 எம்பி.க்களை கொண்டிருக்கும்.
* திரிணாமுல் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் முறையே 13 மற்றும் 5 எம்.பி.க்களை கொண்டிருக்கும்.
* அ.தி.மு.க.வின் பலம், மாநிலங்களவையில் 5-ல் இருந்து 4 ஆக குறைகிறது. சமாஜ்வாடியின் பலம் 5-ல் இருந்து 3 ஆக குறைகிறது. இந்தக் கட்சி தனது இடங்களை முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், ராஷ்டீரிய லோக்தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரிக்கு வழங்கி உள்ளது.
* ராஷ்டீரிய ஜனதாதளம் எம்.பி.க்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 6 ஆகிறது.
* ஒரே இடத்தை பெற்றிருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் எண்ணிக்கை 2 ஆகிறது. 2 இடங்களை பெற்றிருந்த சிரோமணி அகாலிதளம் பூஜ்யம் ஆகிறது.
* ஓய்வு பெற்றவர்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபலங்கள் பட்டியலில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சுயேச்சை கபில் சிபல், ராஷ்டீரிய ஜனதாதளத்தின் மிசா பாரதி, தேசியவாத காங்கிரசின் பிரபுல் படேல், சிவசேனாவின் சஞ்சய் ராவுத் இடம் பெற்றுள்ளனர்.