மராட்டிய துணை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் நிராகரிப்பு


மராட்டிய துணை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் நிராகரிப்பு
x

நர்ஹரி ஜெர்வால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் அளித்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவ சேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

சிவசேனாவில் மொத்தம் உள்ள 56 எம்எல்ஏக்களில் 30-க்கும் மேற்பட்டோர் எதிரணியில் உள்ளனர். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா முடிவு செய்தது. மராட்டிய சட்டமன்றத்தில் சபாநாயகர் பதவி காலியாக உள்ள நிலையில் துணை சபாநாயகர் நர்ஹரி ஜெர்வாலிடம், 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும்படி சிவசேனா மனு அளித்தது.

அதன்படி அந்த 16 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நாளை மறுநாளுக்குள் நோட்டீசுக்கு பதிலளிக்க துணை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், துணை சபாநாயகர் நர்ஹரி ஜெர்வால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஷிண்டே தரப்பில் உள்ள 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் அளித்தனர். ஆனால் இந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்ட எம்.எல்.ஏ.க்கள் யாரும் அதை அலுவலகத்தில் சமர்ப்பிக்காததாலும், கடிதத்தில் அசல் கையொப்பம் இல்லாததாலும் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஏக்நாத் ஷிண்டேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


Next Story