பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து பெண்கள் உள்பட 81 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை


பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து பெண்கள் உள்பட 81 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:46 PM GMT)

பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 2 பெண் கைதிகள் உள்பட 81 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 2 பெண் கைதிகள் உள்பட 81 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

அரசு உத்தரவு

பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா சிறை உள்ளது. இந்த சிறையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள், விசாரணை கைதிகள் என ஏறக்குறைய 5 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயுள் தண்டனை கைதிகளும் அடங்குவர். இந்த நிலையில் கடந்த பா.ஜனதா ஆட்சியின்போது நன்னடத்தை அடிப்படையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் 214 பேரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது விடுவிப்பு பணிகள் முடிக்கப்பட்டது. அதையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து முதற்கட்டமாக 81 ஆயுள் தண்டனை கைதிகளை சிறைத்துறை விடுதலை செய்தது. இதில் 2 பெண் கைதிகளும் அடங்குவர்.

மைசூரு சிறையில்...

இதையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளை, அவர்களது குடும்பத்தினர் சிறைச்சாலை முன்பு கட்டி அணைத்து மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர். முன்னதாக விடுவிக்கப்பட்டவர்களுக்கு, சிறைத்துறை போலீசார் ரோஜா உள்ளிட்ட பூக்களை கொடுத்து வழியனுப்பி வைத்தனர். மேலும் அவர்களுக்கு விடுதலை சான்றிதழ்களையும் வழங்கினர். விடுதலையான கைதிகள், இனி இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடமாட்டேன் என கைப்பட கடிதம் எழுதி, கையெழுத்திட்டு கொடுத்தனர்.

இதேபோல் மைசூரு மத்திய சிறையில் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று வந்த 24 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் பரோல் முறையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தகவல் அளித்துள்ளது. விடுவிப்பின்போது நீதிபதி தினேஷ், கைதிகளுக்கு கடிதம் ஒன்றை கொடுத்தார். அதில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்வழியில் வாழுமாறு எழுதி இருந்தார்.


Next Story