4 ஆண்டுகளில் மழை வெள்ளத்தால் 2.56 லட்சம் வீடுகள் சேதம்; மந்திரி ஆர்.அசோக் தகவல்


4 ஆண்டுகளில் மழை வெள்ளத்தால் 2.56 லட்சம் வீடுகள் சேதம்; மந்திரி ஆர்.அசோக் தகவல்
x

கனமழையால் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று மழை வெள்ள பாதிப்புகள் குறித்து நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசினார். அப்போது வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் குறுக்கிட்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மழை வெள்ளம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் 2 லட்சத்து 56 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதில் ரூ.3 ஆயிரத்து 200 கோடி நிவாரணம் வழங்கியுள்ளோம். நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 41 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.176 கோடி நிவாரணம் வழங்கியுள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசும்போது, சேதம் அடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை என்று கூறினார். அது தவறு. நாங்கள் உடனடியாக நிவாரணம் வழங்கும் பணிகளை தொடங்கி மேற்கொண்டோம். மேலும் அவசர தேவைக்காக முழுமையாக வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளோம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் நேரில் பார்வையிட்டேன். இயற்கை பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளை மீறி நாங்கள் விவசாயிகள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்தோருக்கு கூடுதல் நிவாரணம் கொடுத்துள்ளோம். அதனால் இந்த சபைக்கு எதிர்க்கட்சி தலைவர் தவறான தகவல் வழங்க கூடாது.

இவ்வாறு ஆர்.அசோக் பேசினார்.


Next Story