பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வந்த மதமாற்றம் திருத்த தடை சட்டம் ரத்து; கர்நாடக மந்திரிசபை முடிவு


பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வந்த மதமாற்றம் திருத்த தடை சட்டம் ரத்து; கர்நாடக மந்திரிசபை முடிவு
x

பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வந்த மதமாற்றம் திருத்த தடை சட்டத்தை ரத்து செய்யவும், ஆர்.எஸ்.எஸ். பற்றி பாடத்தை நீக்கவும் கர்நாடக மந்திரி சபை முடிவு செய்துள்ளது.

பெங்களூரு:

மந்திரிசபை கூட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் அரசு அமைந்ததில் இருந்து பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை திருத்த சட்டம், வேளாண்மை சட்டம், பசுவதை தடை சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று மந்திரிகள் தொடர்ந்து கூறி வந்தனர். குறிப்பாக மதமாற்றம் தடை திருத்த சட்டம், ஹிஜாப், பசுவதை தடுப்பு சட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்படும் என்றே கூறி வந்தார்கள்.

இந்த நிலையில், பெங்களூரு விதானசவுதாவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சில சட்டங்களை ரத்து செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டம் மற்றும் விவகாரத்துறை

மந்திரி எச்.கே.பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதமாற்றம் தடை திருத்த சட்டம் ரத்து

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தின் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த பா.ஜனதா ஆட்சியில் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்தில் (மதமாற்றம் தடை சட்டம்) 2022-யில் திருத்தம் செய்யப்பட்டு சட்டசபை மற்றும் மேல்-சபையில் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இந்த மதமாற்றம் தடை திருத்த சட்டத்தை ரத்து செய்வது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்றம் தடை திருத்த சட்டத்தை ரத்து செய்வது என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. வருகிற ஜூலை 3-ந் தேதி நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மதமாற்றம் தடை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, மீண்டும் தாக்கல் செய்யவும் மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

ஏ.பி.எம்.சி. சட்டம்

இதுபோல், கடந்த பா.ஜனதா ஆட்சியில் ஏ.பி.எம்.சி. வேளாண் சட்டமும் அமல்படுத்தப்பட்டு இருந்தது. அந்த சட்டத்தையும் ரத்து செய்ய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ஏ.பி.எம்.சி. சட்டத்தில் கடந்த ஆட்சியில் திருத்தம் செய்யப்பட்டதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த சட்ட திருத்தம் காரணமாக

மார்க்கெட்டுகளில் வியாபாரம் பெருகும் என்று கூறினார்கள். ஏ.பி.எம்.சி. சட்டத்தில் திருத்தம் செய்யும் முன்பாக ரூ.670 கோடி வியாபாரம் நடந்திருந்தது.

தற்போது அது ரூ.200 கோடிக்கு குறைந்து விட்டது. எனவே விவசாயிகளுக்கு அனுகூலம் ஏற்படும் விதமாக ஏ.பி.எம்.சி. சட்டம் ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் மார்க்கெட்டுகள் தவிர்த்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் எந்த லாபமும் ஏற்படாத காரணத்தால், இந்த சட்டத்தை ரத்து செய்ய காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

பாட புத்தகங்களில் மாற்றம்

ஏ.பி.எம்.சி. சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டு இருந்தாலும், அதில் 4 முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு ஜூலை மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த 4 திருத்தங்கள் செய்வதன் மூலமாக ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுகளில் நடைபெறும் வியாபாரத்திற்காக, அங்கே உரிய கட்டணத்தை செலுத்தும்படி செய்யப்படும்.

கர்நாடகத்தில் பாட புத்தகங்களிலும் மாற்றம் செய்வது என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது. கடந்த ஆட்சியில் பாட புத்தகங்களில் சேர்க்கப்பட்டவை விடுவிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். பாடம் நீக்கம்

அதுபோல் கர்நாடக பள்ளி பாட புத்தகங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக பாடபுத்தகத்தில் மாற்றம் செய்வதற்காக ராஜப்பா தளவாய் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவினர் அளித்த பரிந்துரையின் பேரில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கன்னடத்தில் 45 பாடங்களை மாற்ற கூறினார்கள். அந்த 45 பாடங்களையும் தற்போது மாற்றினால், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், முக்கிய பாடங்கள் மட்டும் மாற்றப்பட்டு, அதனை துணை புத்தகமாக வழங்க மந்திரிசபையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல், பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேசவ் பால்ராம் ஹெட்கேவார் மற்றும் இந்துத்துவா தத்துவவாதி வீர சாவர்க்கர் சம்பந்தப்பட்ட பாடங்களும் நீக்கப்படுகிறது. அதுபோல், இந்திரா காந்தி பற்றி நேரு எழுதியது மற்றும் அம்பேத்கர் சம்பந்தப்பட்ட கவிதை மீண்டும் சேர்க்கப்படுகிறது. கடந்த பா.ஜனதா ஆட்சியில் சேர்க்கப்பட்ட பாடங்கள் நீக்கப்பட்டு, அதற்கு முன்பாக பாட புத்தகங்களில் இருந்தவை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

சக்கரவர்த்தி சூழிபெலே எழுதிய பாடம்

அதுபோல் கடந்த பா.ஜனதா ஆட்சியில் பாட புத்தகங்களில்இருந்து நீக்கப்பட்ட சமூக சீர்திருத்தவாதி சாவித்திரி பாய், பூலே ஆகியோரை பற்றிய பாடங்களும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்று சக்கரவர்த்தி சூழிபெலே எழுதி பாடமும் நீக்குவதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. சில பாடங்களில் கடந்த ஆட்சியில் கடுமையான வார்த்தைகள் சேர்க்கப்பட்டு இருந்தன. அவற்றையும் நீக்க மந்திரிசபை அனுமதி வழங்கி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக அனைத்து பாடங்களையும் மாற்றினால் பல கோடி ரூபாய் செலவாகும். இதனை தவிர்க்க துணை புத்தகம் தயாரித்து வழங்குவதன் மூலமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையே செலவாகும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியதை தற்போது நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்.

இவ்வாறு மது பங்காரப்பா கூறினார்.


Next Story