மானேக்ஷா மைதானத்தில் குடியரசு தின விழா; கவர்னர் தாவர்சந்த் கெலாட் இன்று தேசிய கொடி ஏற்றுகிறார்


மானேக்ஷா மைதானத்தில் குடியரசு தின விழா; கவர்னர் தாவர்சந்த் கெலாட் இன்று தேசிய கொடி ஏற்றுகிறார்
x

பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் கவா்னர் தாவர்சந்த் கெலாட் தேசிய கொடி ஏற்றுகிறார்.

பெங்களூரு:

பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் கவா்னர் தாவர்சந்த் கெலாட் தேசிய கொடி ஏற்றுகிறார்.

குடியரசு தின விழா

பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு கப்பன் ரோட்டில் உள்ள பீல்டு மார்ஷல் மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் காலை 9 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார். அதன் பிறகு அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் குழுவின் மரியாதையை ஏற்று கொள்கிறார். பின்னர் அவர் குடியரசு தின உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு நடக்கிறது. இந்த அணிவகுப்பில் 38 குழுக்கள் கலந்து கொள்கின்றன. அந்த குழுக்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக்கொள்கிறார்.

அதன் பின்னர் 2,000 பள்ளி குழந்தைகள், தேசபக்தியை வெளிப்படுத்தும் பாடல்களுக்கு நடன கலை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இறுதியில் கலரி சண்டை, ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட கலை நிகழ்ச்சி குழுக்கள் மற்றும் அணிவகுப்பு குழுக்களுக்கு கவர்னர் விருது வழங்கி பாராட்டுகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைகிறது.

பசவராஜ் பொம்மை

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முப்படைகளின் உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். விழா நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மைதானத்தை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.


Next Story