திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது; ரூ.98 லட்சம் தங்க நகைகள் மீட்பு
பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.98 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.98 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ரமன்குப்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நகைக்கடை ஊழியர் கைது
பெங்களூரு காமாட்சி பாளையாவில் உள்ள நகைக்கடையில் 1½ கிலோ தங்க நகைகள் திருட்டுப்போய் இருந்தது. இதுகுறித்து காமாட்சி பாளையா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், கடந்த 5 ஆண்டுகளாக நகைக்கடையில் வேலை செய்ததும், உரிமையாளருக்கு தெரியாமல் கள்ளச்சாவி தயாரித்து 1½ கிலோ தங்க நகைகளை திருடி விற்றதும் தெரியவந்தது. பின்னர் அவர் நகைகளுடன் தலைமறைவானதும் தெரியவந்தது.
இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், ராஜஸ்தானுக்கு சென்று ரஞ்சித் சிங்கை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
ரூ.98 லட்சம் தங்க நகைகள்
இதுபோல், பெங்களூருவில் பூட்டிய வீடுகளின் கதவை உடைத்தும், கள்ளச்சாவி பயன்படுத்தியும் நகைகள், பணத்தை திருடி வந்ததாக முகமது சதாம் (வயது 36), சையத் தரபேஜ் பாஷா (32), அபீத் அஜம் (31) ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 900 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.98 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.