குஜராத் பால விபத்தில் மீட்பு, நிவாரண பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன: பிரதமர் மோடி தகவல்
குஜராத் தொங்கு பாலம் விபத்து பகுதிக்கு நாளை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என கூறியுள்ளார்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. பாலம் சிதிலம் அடைந்த நிலையில், சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது.
அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து, மக்களின் பயன்பாட்டுக்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26-ந்தேதி பாலம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதனையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்து உள்ளது. 177 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கெவாடியா நகரின் ஏக்தா நகர் பகுதியில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் 147-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசும்போது, மோர்பி பால விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொய்வு எதுவும் இல்லை.
குஜராத் அரசு நேற்றைய தினத்தில் இருந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மாநில அரசுக்கு மத்திய அரசும் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி விசாரிக்க குஜராத் அரசு குழு ஒன்றை அமைத்து உள்ளது. ஒரு புறம் வேதனையுடன் கூடிய மனதுடன் இருந்தபோதும், மறுபுறம் கடமையை செய்வதற்கான பாதை காத்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.