கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆஸ்பத்திரிகளில் கட்டுப்பாடு - மத்திய அரசு


கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆஸ்பத்திரிகளில் கட்டுப்பாடு - மத்திய அரசு
x

உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆஸ்பத்திரியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

சீனாவில் 'பி.எப்.7'

கொரோனா 2-வது அலையின்போது தொற்று பரவல் உச்சத்தை அடைந்து பல உயிர்களை பலி வாங்கியது. ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி குறைபாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றால் தொற்று பாதித்தவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். இதனால் நாடு முழுவதும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் நீண்ட போராட்டத்தால் கொரோனா கட்டுக்குள் வந்து, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.ஆனால் தற்போது உலக நாடுகள் புது பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. சீனாவில் 'பி.எப்.7' வகை வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியாமல் வைரஸ் தொற்று ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பரவிவிட்டது. இந்த தொற்று மூலம் கடுமையான பாதிப்பு ஏற்படலாம் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே சீனாவில் இருந்து வந்தவர்களால் குஜராத், ஒடிசா மாநிலங்களில் இந்த புது வகை தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மத்திய அரசு கட்டுப்பாட்டு விதிமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறது.இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

மருத்துவ கல்வி இயக்குனர், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி டீன்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

செயல் திட்டம், ஒத்திகை

* சீனாவில் உருமாறிய கொரோனா பரவுவதை தொடர்ந்து, முதல்-அமைச்சர் தலைமையில் கடந்த 22-ந்தேதி நடந்த கூட்டத்தில், வருங்காலங்களில் அவசர நிலையை எதிர்கொள்ள ஏதுவாக செயல் திட்டம் வகுக்கப்பட்டது. எனவே அடுத்த 6 மாதத்துக்கு தேவையான பரிசோதனைகளை செய்வதற்கான உபகரணங்களை தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திடம் தெரிவித்து, முன்னதாகவே பெற வேண்டும்.

* ஒத்திகை நடத்தி வருகிற 31-ந்தேதிக்குள் தயார்நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*அனைத்து வெண்டிலேட்டர்களும் சீராக ஆய்வு செய்யப்பட்டு, பயோ மெடிக்கல் என்ஜினீயர்கள் மூலம் பழுது நீக்கப்பட்டு, தயார்நிலையில் வைக்கப்படவேண்டும்.

* ஆஸ்பத்திரிகளில் உள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் பயோ மெடிக்கல் என்ஜினீயர்கள் மூலமாக சோதிக்க வேண்டும். பயன்படுத்தப்படாத செறிவூட்டிகளை பாதுகாப்பான இடத்தில் வைக்கவேண்டும்.

* பி மற்றும் டி வகை சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு அவசரகால பயன்பாட்டுக்காக தயார்நிலையில் வைக்கவேண்டும்.

* ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை உடல் வெப்ப பரிசோதனை கருவி, ஆக்சிமீட்டர் மூலமாக ஆக்சிஜன், நாடி துடிப்பு அளவுகளை சோதிக்க வேண்டும்.

முககவசம் கட்டாயம்

* ஆக்சிஜன் உதவியோடு இருக்கவேண்டிய நோயாளிகளின் தேவைக்காக வெண்டிலேட்டர் முககவசம், நெபுலைசர், பில்டர்கள் தேவைப்பாடு குறித்து தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

* முழு உடல் கவசம், என்.-95 ரக முககவசம், 3 அடுக்கு முககவசம், கொரோனா சிகிச்சைக்குரிய மருந்துகள் உள்பட பிற முக்கிய மருந்துகள் தொடர்பாக கணக்கிடப்பட்டு, அதனை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

* ஆஸ்பத்திரி வளாகத்தில் சுகாதார பணியாளர்கள் அனைவரையும் முககவசம் அணிய அறிவுறுத்த வேண்டும்.

* மருத்துவக்கல்லூரி மாணவர்களின் விடுதிகள், பாராமெடிக்கல் மற்றும் நர்சிங் மாணவ விடுதிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

* ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகள், நோயாளிகளை உடன் இருந்து கவனிப்பவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

* மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.

* ஆஸ்பத்திரியில் உள்ள தடுப்பூசி மையங்களில் பணியாளர்கள் முழுமையாக இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

* மருத்துவ மாணவர்கள், பாரா மெடிக்கல், நர்சிங் மாணவர்கள் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்யவேண்டும்.

கூடுதல் படுக்கைகள்

* பரிசோதித்தல், கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் என்பதை கோஷமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

* கொரோனா மேலாண்மை, கொரோனா சிகிச்சை மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததற்கு பிந்தைய மேலாண்மை தொடர்பாக தொடர்ச்சியாக ஆஸ்பத்திரி உயர் அதிகாரி நெறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் சீராக நடத்தவேண்டும்.

* மயக்கவியல் துறை தலைவர் வழிகாட்டுதலில் இயங்கும் குழு, வார்டுகளில் ஆக்சிஜன் வினியோகம் செய்வது மற்றும் ஆக்சிஜன் இருப்பு தொடர்பாக கண்காணிக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் திரவ நிலையில் உள்ள ஆக்சிஜன் மற்றும் சிலிண்டர்களில் உள்ள ஆக்சிஜன் தொடர்பாக சீராக ஆய்வு செய்ய வேண்டும்.

* ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்து, பரிசோதனை முடிவுகளை உடனடியாக வழங்க வேண்டும்.

* பாதிப்புகளின் அடிப்படையில் கொரோனா வார்டில் கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தவேண்டும்.

கண்காணிப்பு

* பொது மருத்துவத்தின் மருத்துவ அதிகாரிகளிடம் குழந்தைகளுக்கான பாதிப்புகளை கையாள்வதற்கு தேவையான பயிற்சி வழ்கவேண்டும்.

* நர்சுகளை வெண்டிலேட்டர் மேலாண்மை, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பது உள்பட பல்வேறு தேவைகளுக்காக பயிற்சி கொடுக்க வேண்டும்.

* கொரோனா நோய் தொடர்பான நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை, ஆஸ்பத்திரியின் மூத்த நர்சு கண்காணிக்க வேண்டும்.

* கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனா வார்டுகளில் உடன் இருந்து கவனிப்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story