பீகாரில் மீண்டும் வன்முறை: ஒருவர் பலி, 80 பேர் கைது; 144 தடை உத்தரவு


பீகாரில் மீண்டும் வன்முறை: ஒருவர் பலி, 80 பேர் கைது; 144 தடை உத்தரவு
x

பீகாரில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் பலியான சம்பவம் தொடர்ச்சியாக 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பாட்னா,

நாடு முழுவதும் ராமநவமி கொண்டாட்டங்கள் கடந்த 30-ந்தேதி நடந்தன. இதன் ஒரு பகுதியாக பீகாரிலும் பல்வேறு நகரங்களில் சாமி சிலைகள் ஊர்வலம், சிலை கரைப்பு உள்ளிட்டவை நடந்தன. இதனை முன்னிட்டு, நாலந்தா மற்றும் சசராம் ஆகிய மாவட்டங்களில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால், வன்முறை பரவியது. 8 பேர் காயமடைந்தனர். 3 பேருக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து நாலந்தா மாவட்டத்தின் பீஹார்ஷெரீப் மற்றும் ரோத்தாஸ் மாவட்டத்தின் சசராம் நகர பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுபற்றி பீகார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். நாலந்தாவில் 27 பேரும், ரோத்தாசில் 18 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என டுவிட்டரில் போலீசார் தெரிவித்து உள்ளனர். மூத்த அதிகாரிகளும் வன்முறை பரவிய பகுதிகளில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து, தூண்டிவிட கூடிய அல்லது பொய்யான செய்திகள் பரவி விடாமல் தடுக்கும் வகையில் சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை பேண ஒத்துழைக்க வேண்டும் என்று போலீசார் டுவிட்டர் வழியே கேட்டு கொண்டனர். இதன் எதிரொலியாக, ரோத்தாஸ் மாவட்டத்தின் சசராம் நகரில் பீகார் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்நிலையில், பீகாரில் மீண்டும் நேற்றிரவு வன்முறை ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

இதுபற்றி நாலந்தா மாவட்டத்தின் பீகார்ஷெரீப் நகரின் போலீஸ் சூப்பிரெண்டு அசோக் மிஷ்ரா கூறும்போது, வன்முறையை தொடர்ந்து போலீசார் நேற்றிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுவரை 8 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கூடுதல் படைகள் குவிக்கப்பட உள்ளன என கூறியுள்ளார. இதேபோன்று நாலந்தா மாவட்ட மாஜிஸ்திரேட் ஷஷாங்க் சுபாங்கர் கூறும்போது, பீகார்ஷெரீப் பகுதியில் 2, 3 இடங்களில் நேற்றிரவு புதிதாக வன்முறை ஏற்பட்டது. தற்போது நிலைமை அமைதியாக உள்ளது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. சமூக விரோதிகள் பலர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதுவரை 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.


Next Story