பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் - முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேட்டி


பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் - முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேட்டி
x

மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கொல்கத்தா,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் கூறியதாவது:-

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், அயோத்தி ராமர் கோவில் முக்கிய பங்கு வகிக்குமா என்பதை காலம்தான் சொல்லும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும். ஜனநாயகத்தில் இருந்து விலகி, எதேச்சதிகாரத்துக்கு நாட்டை கொண்டு சென்றுவிடுவார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியாளரோ அல்லது ஆளும் கட்சியோ வெற்றியை அறிவிக்கும் பல நாடுகளை போல இந்தியாவும் மாறிவிடும். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம். அது பா.ஜ.க.வுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால், மத்திய விசாரணை முகமைகள் மூலம் மற்ற கட்சிகளை மிரட்டி, பிளவுபடுத்தி ஒரு அணியை உருவாக்கி வருகிறது.

அதன் கூட்டணி கட்சிகளை பார்த்தாலே தெரியும். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு, சிவசேனாவின் ஒரு பிரிவு மற்றும் அ.தி.மு.க.வின் ஒரு பிரிவு ஆகியோர்தான் அங்கு உள்ளனர். தற்போது ஐக்கிய ஜனதாதளத்தையும் தங்களது கூட்டணியில் ஐக்கியப்படுத்தியுள்ளனர். இந்த கூட்டணியை துப்பாக்கி முனையில் நடந்த கட்டாயத் திருமணம் என்றே குறிப்பிடலாம்.

அதேசமயம் காங்கிரஸ் முன்னெடுக்கும் கூட்டணியானது ஒருவரை ஒருவர் மதிக்கும் வகையில் உள்ளது. ஒருவருக்கொருவர் கொடுக்கவும் வாங்கவும் தயாராக இருக்கும் கட்சிகளுக்கு இடையே கூட்டணியை உருவாக்கி வருகிறோம். இதுதான் இரண்டு கூட்டணிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுடனான கூட்டணி முறிந்துவிடவில்லை என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். எனவே இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெறாது என்ற முடிவுக்கு வரமுடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது. கூட்டாட்சிக்கு எதிரான வினோதமான யோசனை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story