மணவிழாவில் 'ரிவால்வர் ரீட்டா'வான மணமகள் தலைமறைவு; கலக்கத்தில் மணமகன்


மணவிழாவில் ரிவால்வர் ரீட்டாவான மணமகள் தலைமறைவு; கலக்கத்தில் மணமகன்
x
தினத்தந்தி 10 April 2023 9:40 AM GMT (Updated: 10 April 2023 9:43 AM GMT)

உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் ரிவால்வர் ரீட்டாவாக மாறிய மணமகள் போலீசாருக்கு பயந்து தலைமறைவான நிலையில், மணமகன் சோகத்தில் உள்ளார்.

ஹத்ராஸ்,

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் சலீம்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், மணமக்கள் ஜோடியாக அமர வைக்கப்பட்டு உறவினர்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

அப்போது, நபர் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை மணமகளின் கையில் கொடுத்து உள்ளார். அதனை வாங்கிய மணமகள், என்ன ஏது என்று யோசிக்காமல், துப்பாக்கியை மேலே பிடித்தபடி, வானை நோக்கி 4 ரவுண்டு சுட்டு உள்ளார். அவரருகே அமர்ந்திருந்த மணமகன் சப்தமின்றி அமைதியாக காணப்பட்டார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதற்கு பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், அப்புறமென்ன...? இனி மணமகளின் அன்புக்கு கட்டுப்பட்டவராக, அவரை நன்றாக கவனித்து கொள்பவராக மாமியார் மாறி விடுவார் என தெரிவித்து உள்ளார்.

எனினும், இந்த விசயம் பரவியதும், ஹத்ராஸ் ஜங்சன் போலீசார் மணமகள் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இதனால், தேனிலவுக்கு செல்ல வேண்டிய மணமகள் தலைமறைவாகி விட்டார். இந்த சோகத்தில் மணமகனும் மூழ்கி விட்டார்.

ஹத்ராஸ் ஜங்சன் காவல் உயரதிகாரி கிரீஷ் சந்த் கவுதம் கூறும்போது, துப்பாக்கி உரிமம் வைத்திருந்த நபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கொண்டாட்டத்திற்காக இதுபோன்று துப்பாக்கி சூடு நடத்துவோர் மற்றவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கிறார்கள்.

இதனால், அவர்களுக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க சட்டத்தில் வழியுள்ளது என கூறியுள்ளார். போலீசார் தேடுவது அறிந்ததும் மணமகள் தப்பியோடி விட்டார். அவரை தேடி வருகிறோம் என கூறியுள்ளார். கைத்துப்பாக்கியை கொடுத்த நபரையும் தேடி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க: திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கி ஏந்திய மணமகள்... விபரீதத்தில் முடிந்த விளையாட்டு


Next Story