சிவாஜிநகரை தக்க வைக்கும் முனைப்பில் ரிஸ்வான் ஹர்ஷத்
சிவாஜிநகரை தக்க வைக்கும் முனைப்பில் ரிஸ்வான் ஹர்ஷத் உள்ளார்.
பெங்களூரு:
சிவாஜிநகர் தொகுதி பெங்களூருவின் முக்கிய வியாபார பகுதியாக விளங்குகிறது. இங்கு பெரிய ஷாப்பிங் மால்கள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. மேலும் பிரசித்தி பெற்ற ரசல் மார்க்கெட் உள்ளது. இங்கு முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். கணிசமான அளவுக்கு தமிழர்களும் இந்த பகுதியில் வசித்து வருகிறார்கள். அத்துடன் இந்துக்கள், கிறிஸ்தவர்களும் இங்கு வசிக்கிறார்கள். புனித அன்னை பெசிலிகா தேவாலயம், சுல்தான் ஷா மஸ்ஜித் மற்றும் கோவில்கள், மசூதிகள் ஆகியவைகள் உள்ளன. இந்த தொகுதியில் சிவாஜிநகர், பாரதி நகர், அல்சூர், வசந்த நகர், ஜெயமஹால், ராமசுவாமி பாளையா, சம்பங்கி பாளையா ஆகிய 7 வார்டுகள் உள்ளன.
இந்த தொகுதியில் 1 லட்சத்து 189 ஆண்களும், 98 ஆயிரத்து 716 பெண்களும், 3-ம் பாலினத்தினர் 9 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதி 1967-ம் ஆண்டு காலக்கட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட சட்டசபை தொகுதியாகும். இங்கு கடந்த 1967-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 12 பொதுதேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 6 தடவை காங்கிரசும், ஜனதாகட்சி 3 தடவையும், ஜனதாதளம் கட்சி ஒரு தடவையும், பா.ஜனதா 2 தடவையும் வெற்றி கொடி நாட்டியுள்ளன.
இந்த தொகுதிகளில் ரோஷன் பெய்க் பொது தேர்தலில் 6 தடவை போட்டியிட்டு 5 தடவை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். இவர் 1985-ம் ஆண்டு தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய ரோஷன் பெய்க் ஜனதா கட்சி சார்பில் 1994-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். அதன்பின்னர் காங்கிரசில் இணைந்த அவர் கடந்த 2008-ம் ஆண்டு அக்கட்சி சார்பில் களமிறங்கி வெற்றி பெற்றார். கடந்த 2013 தேர்தலிலும் அவரே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவா், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாக செய்து அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். பின்னர் 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரிஸ்வான் ஹர்ஷத் வெற்றி வாகை சூடினார். முறைகேடு புகார் வந்ததால் பா.ஜனதா சார்பில் ரோஷன் பெய்க்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தற்போது நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. ரிஸ்வான் ஹர்ஷத் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் என்.சந்திரா என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி பலமான வேட்பாளரை தேடி வருகிறது.
முஸ்லிம் சமுதாய மக்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு ரிஸ்வான் ஹர்ஷத்துக்கு அதிகமாக உள்ளது. இது அவருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதனால் ரிஸ்வான் ஹர்ஷத் சிவாஜிநகர் தொகுதியை தக்கவைக்கும் முனைப்பில் தீவிர களப்பணியாற்றி வருகிறார். எது எப்படியோ வருகிற சட்டசபை தேர்தலில் சிவாஜிநகர் தொகுதியில் வெற்றியை பறிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான விடை, தேர்தல் ஓட்டு எண்ணிக்கையான வருகிற 13-ந்தேதி கிடைத்துவிடும்.