நெல்லை ரெயிலில் கத்திமுனையில் பயணிகளிடம் கொள்ளை முயற்சி; துணிச்சலுடன் செயல்பட்டு மர்மநபர்களை பிடித்த டிக்கெட் பரிசோதகர்கள்


நெல்லை ரெயிலில் கத்திமுனையில் பயணிகளிடம் கொள்ளை முயற்சி; துணிச்சலுடன் செயல்பட்டு மர்மநபர்களை பிடித்த டிக்கெட் பரிசோதகர்கள்
x
தினத்தந்தி 1 July 2023 6:45 PM GMT (Updated: 1 July 2023 6:45 PM GMT)

மங்களூருவில் நெல்லை ரெயிலில் கத்திமுனையில் பயணிகளிடம் கொள்ளையடிக்க முயன்ற 2 மர்மநபர்களை டிக்கெட் பரிசோதகர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மங்களூரு:

மராட்டிய மாநிலம் மும்பை தாதரில் இருந்து தமிழ்நாடு தென்மாவட்டமான நெல்லை நோக்கி கடந்த 29-ந்தேதி வாராந்திர தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22629) புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மராட்டியம், கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களை இணைக்கும் வகையில் இயங்குகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் மதியம் கர்நாடக மாநிலம் உடுப்பி ரெயில் நிலையத்தை தாண்டி மங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது மங்களூரு சூரத்கல் ரெயில் நிலையத்தை தாண்டி தோக்கூர் ரெயில் நிலையம் அருகே தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில், கிராசிங்கிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது நின்றிருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 'எஸ்-7' முன்பதிவு பெட்டியில் 2 மர்மநபர்கள் ஏறினார்கள். அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பயணிகளிடம் காட்டி மிரட்டி நகைகள், பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். மேலும் அவர்கள் கத்தியால் படுக்கையை கிழித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், அலறி அடித்து கொண்டு முன்பதிவு செய்த பெட்டியில் இருந்து இறங்கி, பொது பெட்டியை நோக்கி ஓடினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்ததும் அந்த ரெயிலில் டிக்கெட் பரிசோதகர்களாக இருந்த பாபு, சீனிவாஸ் ஷெட்டி, திம்மப்ப கவுடா ஆகியோர் விரைந்து வந்தனர்.

அவர்கள் 3 பேரும் துணிச்சலுடன் செயல்பட்டு பயணிகளிடம் கத்திமுனையில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் மர்மநபர்கள் வைத்திருந்த கத்தியை பிடுங்கி கைகளை கட்டினர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கங்கனாடி போலீசில் டிக்கெட் பரிசோதகர்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தமிழகத்தை சேர்ந்த ஜெயபிரபு, பிரசாத் என்பது தெரியவந்தது. கோவாவில் வேலை பார்த்து வந்த அவர்கள் நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப்பெட்டியில் சொந்த ஊருக்கு செல்லும்போது, தோக்கூர் பகுதியில் கிராசிங்கிற்காக ரெயில் நின்றபோது, முன்பதிவு செய்த பெட்டிக்கு சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அத்துடன் அவர்கள் 2 பேரும் மதுபோதையில் இருந்ததும் தெரிந்தது. இதுகுறித்து கங்கனாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் ரெயில் பயணிகள் மத்தியில் பீதியும், பதற்றமும் ஏற்பட்டது. டிக்கெட் பரிசோதகர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு மர்மநபர்களை மடக்கி பிடித்ததால் பயணிகள் உயிரும், உடைமையும் தப்பின. டிக்கெட் பரிசோதகர்களை பயணிகளும், போலீசாரும் வெகுவாக பாராட்டினார்கள்.

தோக்கூர்-சூரத்கல் இடைப்பட்ட பகுதிகளில் சிக்னல் மற்றும் கிராசிங்கிற்காக நிற்கும் ரெயில்களில் அடிக்கடி இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடப்பாகவும், இதனை தடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story