பெங்களூருவில் பெண்ணிடம் ரூ.2½ லட்சம் தாலி சங்கிலி பறித்ததமிழக போலி சாமியாருக்கு வலைவீச்சு


பெங்களூருவில் பெண்ணிடம் ரூ.2½ லட்சம் தாலி சங்கிலி பறித்ததமிழக போலி சாமியாருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Aug 2023 6:45 PM GMT (Updated: 28 Aug 2023 6:45 PM GMT)

பெங்களூருவில் பெண்ணிடம் ரூ.2½ லட்சம் தாலி சங்கிலி பறித்த தமிழக போலி சாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு:-

கணவரை பிரிந்து வசித்த பெண்

பெங்களூரு இந்திராநகர் பகுதியில் சுகுணா என்ற திருமணமான பெண் வசித்து வருகிறார். அந்த பெண், குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இதையடுத்து அவர் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா என்ற சாமியாரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் பெண்ணின் வீட்டிற்கு வந்து பரிகார பூஜைகள் செய்வதாகவும், அதன்பிறகு குடும்ப பிரச்சினை இருக்காது எனவும் கூறி உள்ளார்.

பரிகார பூஜை

அதை நம்பிய பெண், சாமியார் ராஜாவை இந்திராநகரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். கடந்த 23-ந் தேதி பெண்ணின் வீட்டிற்கு சாமியார் வந்தார். அவர் வீட்டின் ஒரு அறையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை நீங்க பரிகார பூஜைகள் செய்தார்.

அப்போது வீட்டில் சுகுணா மட்டும் தனியாக இருந்துள்ளார். பூஜை செய்யும்போது சுகுணா அணிந்திருந்த தங்க தாலி சங்கிலியை கழற்றி வைக்குமாறு கூறினார். அதன்படி அந்த பெண்ணும் தான் அணிந்த தாலி சங்கிலியை கழற்றி வைத்தார்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து அந்த பெண்ணை வீட்டிற்கு வெளியே சென்று பூஜை செய்யுமாறு சாமியார் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த பெண் வீட்டிற்குள் வந்து பார்த்தார். அப்போது வீட்டில் பூஜை செய்த சாமியார் மாயமானார்.

மேலும் அவர் கழற்றி வைத்த தாலி சங்கிலியையும் காணவில்லை. அப்போது தான் பரிகார பூஜை செய்வதுபோல் நடித்து, தன்னிடம் இருந்து தங்க தாலியை அபேஸ் செய்து சென்றதை உணர்ந்தார். உடனே அவர் இதுகுறித்து இந்திராநகர் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலி சாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பறிபோன தாலி சங்கிலியின் மதிப்பு ரூ.2½ லட்சம் என போலீசார் கூறினர்.


Next Story