ரூ.15 கோடி மோசடி... முன்னாள் தொழில் பங்குதாரர் மீது தோனி வழக்கு...!


ரூ.15 கோடி மோசடி... முன்னாள் தொழில் பங்குதாரர் மீது தோனி வழக்கு...!
x

உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் அகாடமியை அமைப்பதற்காக எம்எஸ் தோனியுடன் அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த திவாகர் ஒப்பந்தம் செய்தார்.

ராஞ்சி,

இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று ஐசிசி உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனான மகேந்திர சிங் தோனி (எம்எஸ் தோனி), மோசடியால் பல கோடி ரூபாய் இழந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தோனியின் தொழில் பங்குதாரரான அர்கா ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட்டின் நிர்வாகிகளான சவுமியா பிஸ்வாஸ் மற்றும் திவாகர் ஆகியோர் மீது ரூ.15 கோடி மோசடி செய்துள்ளதாக ராஞ்சி நீதிமன்றத்தில் தோனி சார்பில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் அகாடமியை அமைப்பதற்காக எம்எஸ் தோனியுடன் அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த திவாகர் கடந்த 2017ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார். அதற்கு தோனி சார்பில் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன, ஆனால் திவாகர் நிபந்தனைகளை பின்பற்றவில்லை. திவாகர், அர்கா ஸ்போர்ட்ஸ் உரிமைக் கட்டணத்தை செலுத்தி தோனியுடன் லாபத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் திவாகர் அவ்வாறு செய்யவில்லை. இதனால் தோனிக்கு ரூ. 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிபந்தனைகளுக்கு ஒத்துழைக்காததால் 2021 ஆகஸ்ட் 15 அன்று அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்க்கு தோனி நோட்டீஸ் அனுப்பினார். அதனால் அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமையும் ரத்து செய்யப்பட்டது. மேலும் தோனி தனது தொழில் பங்குதாரர் திவாகருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இதை அடுத்து ராஞ்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. எம்எஸ் தோனி சார்பில் அவரது வழக்கறிஞர் தயானந்த் சிங் என்பவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.


Next Story