பட்டாசு வெடிவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
பெங்களூரு அருகே பட்டாசு வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு அருகே பட்டாசு வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
13 பேர் பலி
பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திப்பள்ளியில் கர்நாடகம்-தமிழக எல்லையில் சாலையோரம் பட்டாசு கடைகள் அமைந்துள்ளன. அங்கு ராமசாமி ரெட்டி என்பவரின் மகன் நவீன் என்பவருக்கு சொந்தமான ஒரு பட்டாசு கடையும் அமைந்துள்ளது. அந்த கடையின் பின்புறம் பட்டாசு குடோனையும் அவர் அமைத்துள்ளார். நேற்று அவரது கடைக்கு தமிழ்நாட்டில் உள்ள சிவகாசியில் இருந்து 2 லாரிகளில் பட்டாசுகள் கொண்டு வரப்பட்டது. அதில் ஒரு லாரியில் இருந்து பட்டாசுகளை குடோனில் தொழிலாளர்கள் இறக்கி வைத்தனர். இன்னொரு லாரியில் இருந்து பட்டாசுகளை இறக்கி வைக்கும்போது திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 13 தொழிலாளர்கள் உடல் கருகி பலியானார்கள்.
டி.கே.சிவக்குமார்
இந்த நிலையில் நேற்று இரவு சம்பவம் நடந்த இடத்திற்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் இங்கு வந்து பார்வையிட்டேன். இதை பார்க்கும்போது மிகவும் வர்த்தமாக உள்ளது. துக்கம் வருகிறது. ஏழைகள், ஒன்று அறியாத தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
எச்சரிக்கையாக...
இங்கு பட்டாசு கடை அமைக்க அனுமதி உள்ளது. குடோன் அமைக்க அனுமதி இல்லை. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பாதுகாப்பு குறைபாடுகளை நமக்கு காட்டி உள்ளது.
இனிமேல் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாளை(அதாவது இன்று) முதல்-மந்திரி சித்தராமையா இங்கு நேரில் வந்து பார்வையிடுகிறார். தற்போது அரசு சார்பில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடை மற்றும் குடோனின் நவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சித்தராமையா இரங்கல்
இதற்கிடையில் பட்டாசு விபத்து குறித்து முதல் மந்திரி சித்தராமையா நேற்றிரவு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல் மந்திரி சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பெங்களூரு அருகே அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு விபத்தில் 13 பேர் பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. பலியான 13 பேரின் குடும்பத்தினர், இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியை கடவுள் அளிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். விபத்து நடந்த பகுதிக்கு நாளை(இன்று) நேரில் சென்று பார்வையிட உள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.