சயனைடு மண்ணை விற்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேட்டி


சயனைடு மண்ணை விற்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேட்டி
x

கோலார் தங்கவயலில் உள்ள சயனைடு மண்ணை விற்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயலில் உள்ள சயனைடு மண்ணை விற்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.

சயனைடு மண்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோலார் தங்கவயலில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள சயனைடு மண், அதாவது தங்கத்தை பிரித்தெடுத்த கழிவு மண் சுரங்க நிர்வாகம் டெண்டர் விட்டிருப்பதாகவும், அதை விற்கப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. இது கோலார் தங்கவயலை சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி தங்கச்சுரங்க நிர்வாக அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசுக்கு உட்பட்டது

சயனைடு மண் மலையை டெண்டர் விட யாரும் முடிவு செய்யவில்லை. மாறாக சயனைடு மண் மலையில் எவ்வளவு உலோகப்பொருட்கள் உள்ளன என்று அவற்றை கண்டறிய நிபுணர்கள் குழுவை தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். அதற்காக தற்காலிக அடிப்படையில் வல்லுனர் குழுவை தேர்வு செய்ய மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் அளிக்கும் அறிக்கையின் பேரில் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அதன்பின்னர் தான் சயனைடு மண் மலையை டெண்டர் விடுவதா?, இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும். அந்த முடிவு மத்திய அரசின் விருப்பதற்கு உட்பட்டது. மத்திய அரசின் அனுமதியின்றி எக்காரணம் கொண்டும் சயனைடு மலையை தங்கச்சுரங்க நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

பிரகலாத் ஜோஷி மறுப்பு

இதுகுறித்து மத்திய கனிம வளத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கோலார் தங்கவயலில் உள்ள சயனைடு மண் மலையை டெண்டர் விட மத்திய அரசு முடிவு செய்யவில்லை. மாறாக அங்குள்ள தங்கம் உள்ளிட்ட உலோகங்களை கண்டறிய நிபுணர்கள் குழுவை தேர்வு செய்வதற்கான டெண்டர் மட்டுமே விடப்பட்டுள்ளது. நிபுணர் குழுவினர் அங்குள்ள உலோகங்களின் மதிப்பு குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள்.

அதன்பின்னர் தான் அதை விற்பனை செய்வதா? இல்லையா? என்பது குறித்து அறிவிக்கப்படும். மேலும் சயனைடு மண் மலையில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் சயனைடு மண் மலையை விற்கும் திட்டம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story