இஸ்ரேலில் ரூ.1.34 லட்சம் சம்பளம்; இந்தியாவின் 4 மாநிலங்களில் இருந்து குவிந்த தொழிலாளர்கள்


இஸ்ரேலில் ரூ.1.34 லட்சம் சம்பளம்; இந்தியாவின் 4 மாநிலங்களில் இருந்து குவிந்த தொழிலாளர்கள்
x

அரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் என வெவ்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் பலர் ரோத்தக் நகரில் நடந்த ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்றனர்.

புதுடெல்லி,

இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையேயான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. பாலஸ்தீனர்களுக்கு எதிரான இந்த போரால், பாலஸ்தீனர்கள் பலரையும் தங்கள் நாட்டில் நடைபெற்று வரும் வேலையில் இருந்து இஸ்ரேல் நீக்கி விட்டது. அவர்களுக்கான பணி அனுமதியை ரத்து செய்து விட்டது.

இதனால், தொழிலாளர் பற்றாக்குறையை இஸ்ரேல் சந்திக்கிறது. இதனை தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டு கட்டிட பணிகள் உள்ளிட்டவற்றுக்கு இந்தியாவில் இருந்து ஆட்களை தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது.

முதல் கட்டத்தில், 10 ஆயிரம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். வருங்காலங்களில் இந்த எண்ணிக்கை 30 ஆயிரம் ஆக அதிகரிக்க கூடும். ரோத்தக்கில் 6 நாட்களுக்கு ஆள்சேர்ப்புக்கான பணிகள் நடைபெறும். கட்டுமானம், ஓவியம் மற்றும் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறார்கள்.

அரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் என வெவ்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் பலர் ரோத்தக் நகரில் நடந்த ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்றனர்.

இதில், இஸ்ரேல் நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு ஆட்கள் தேவை என தகவல் கிடைத்த சூழலில், பலரும் வேலை தேடி குவிந்து விட்டனர். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சூழலை பற்றி வருத்தத்துடன் கூறிய தொழிலாளர்கள், இஸ்ரேலில் அதிக சம்பளத்திற்கான உறுதி அளிக்கப்படுகிறது என தெரிவித்தனர். போருக்கான சூழல் இருந்தபோதும், அது தங்களுக்கு தடையாக இருக்காது என்றும் அவர்கள் கூறினர்.

இதில், இஸ்ரேலில் வேலை கிடைப்பதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1.34 லட்சம் சம்பளம் கிடைக்கும் என தொழிலாளர் துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.


Next Story