கர்நாடகத்தில் 2 நாட்களாக தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்


கர்நாடகத்தில் 2 நாட்களாக தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்
x

Image Courtesy : ANI

தூய்மை பணியாளர்களின் பிரச்சினையை தீர்க்க மனிதாபிமான முறையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதி அளித்துள்ளார்.

கர்நாடகத்தில் உள்ள மாநகராட்சி, நகரசபைகளில் சுமார் 2 லட்சம் பேர் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இதில் ஒப்பந்த அடிப்படையிலும் ஆயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், மாநகராட்சி, நகரசபைகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ஆனால் இதுவரை அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. இதை கண்டித்தும், தங்களின் முக்கிய கோரிக்கைளை கர்நாடக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் அவர்கள் நேற்று முன்தினம் முதல் 2 நாட்களாக மாநிலம் முழுவதும் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாநில தலைநகரான பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களும் போராட்ட களத்தில் குதித்து இருப்பதால், மாநகரில் குப்பை கழிவுகள் அகற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக்கிய சாலைகள், குடியிருப்பு, தொழிற்பேட்டை பகுதிகளில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஐதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

"நேரடி கட்டண முறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் சேவைகளை முறைப்படுத்த கொள்கை அளவில் மாநில அரசு ஒப்புக்கொண்டு உள்ளது. தூய்மை பணியாளர்களின் பிரச்சினையை தீர்க்க மனிதாபிமான முறையில் அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story