திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் சித்திரவதை செய்யப்படுகிறார் - சஞ்சய் சிங் குற்றச்சாட்டு


திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் சித்திரவதை செய்யப்படுகிறார் - சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
x

கெஜ்ரிவாலின் மன உறுதியை குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பேரில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாக சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் சிங் கூறியதாவது,

"டெல்லியில் பெரும்பான்மையுடன் 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய அரசு மற்றும் பிரதமரின் உத்தரவின் பேரில் சித்திரவதை செய்யப்படுகிறார்.

அவரது மன உறுதியை குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவருடைய உரிமைகள், வசதிகள் மறுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் வெளிப்படையாகவே செய்யப்படுகின்றன. சிறை விதிகளின் படி சிறையில் இருப்பவர்களை யார் வேண்டுமானாலும் சிறையில் நேருக்கு நேர் சந்திக்கலாம்.

ஆனால், கெஜ்ரிவாலின் மனைவி, நோய்வாய்ப்பட்ட அவரது பெற்றோர் சிறையில் அவரை சந்திக்க வந்தபோது, நேருக்கு நேர் சந்திக்க முடியாது என கூறியுள்ளனர். பயங்கரமான குற்றவாளிகள் கூட சிறையில் சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.ஆனால் 3 முறை முதல்-மந்திரியாக இருந்தவர், தனது மனைவியை ஜன்னல் வழியாகவே சந்திக்க அனுமதிக்கப்படுகிறார். அதுவும் இடையில் கண்ணாடி உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.



Next Story