மனைவியுடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மனைவியுடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

மனைவியுடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மனைவியுடனான கட்டாய உறவு தொடர்பான மனுக்களை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, கடந்த மே 11-ந் தேதி மாறுபட்ட தீர்ப்பை கூறியது. நீதிபதி ராஜீவ் ஷக்தர் வழங்கிய தீர்ப்பில், மனைவியுடனான கட்டாய உறவு குற்றமாகாது என விலக்கு அளிக்கும் பிரிவு அரசமைப்புச் சட்டத்துக்கும் புறம்பானது என்றார்.

நீதிபதி ஹரிசங்கர் மாறுபட்டு, மனைவியுடனான கட்டாய உறவு குற்றமாகாது என விலக்கு அளிக்கும் பிரிவு அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது இல்லை. புரிந்துகொள்ளத்தக்க வேறுபாட்டின் அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பில் தெரிவித்தார்.இது தொடர்பாக ஹார்மனி, ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த மனுக்கள் தொடர்பாக பிப்ரவரி 15-ந் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் விசாரணையை மார்ச் 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தது. முன்னதாக விசாரணையின்போது, மனைவியுடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரும் விவகாரம் சமூக, சட்டரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மாநில அரசை சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு கேட்டதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.


Next Story